நவம்பர் வரை ரேஷன் அரிசி இலவசம்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு
8/6/2025 2:38:04 PM
திண்டுக்கல்: ‘‘ரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை பொதுமக்களுக்கு விலையில்லா அரிசி வழங்கப்படும்’’ என திண்டுக்கல்லில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.8.69 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.8.88 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை அவர் திறந்து வைத்தார். மேலும் 3,500 பயனாளிகளுக்கு ரூ.3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: தமிழகத்தில் கொரோனாவை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை குறைவு. பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த நோயை கட்டுப்படுத்த முடியாது. இந்த நோயால் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டாலும், அனைவரையும் காப்பாற்றக் கூடிய அளவுக்கு சிகிச்சை வசதிகள் தமிழகத்தில் உள்ளன. மக்களை காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை. நோய் தொற்று ஏற்பட்ட பின்னரும் கவனக்குறைவாக இருந்தால், அபாய கட்டத்தை எட்ட வேண்டிய நிலை ஏற்படும். மக்களாகிய நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஊரடங்கை எதிர்கொள்ளும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விலையில்லா அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்டவைகளும் ரேஷன் கடைகள் மூலம் கடந்த 4 மாதங்களாக வழங்கப்பட்டு வருகின்றன.
வரும் நவம்பர் வரை கார்டுதாரர்களுக்கு விலையில்லா அரிசி வழங்கப்படும். விளை பொருட்கள், அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்ல எந்த தடையும் கிடையாது. காய்கறிகள் உள்ளிட்ட அன்றாட அத்தியாவசியப் பொருட்களை எடுத்து செல்லவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.ரூ.10 கோடி மதிப்பில் இஸ்ரேல் உடன் ஒப்பந்த திட்டத்தில் தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு நாற்றங்கால்கள் வழங்கப்பட்டு வருகின்றன. உள்ளாட்சி துறை, பொதுப்பணித் துறை சார்பில் 500க்கும் மேற்பட்ட பண்ணைக் குட்டைகள், 400க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.
முருக பெருமான் எழுந்தருளியுள்ள மாவட்டம் இது. திண்டுக்கல் என்றாலே பூட்டுதான் நினைவுக்கு வரும். மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் நூற்பாலைகள் உள்ளன. அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். உலக முதலீட்டாளர் திட்டத்தில் இம்மாவட்டத்திற்கு பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அகரம் பகுதியில் பருத்தி நூல் மற்றும் ஆடை உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. குடி மராமத்து திட்டத்தின் கீழ் மழைநீர் சேகரிப்பு உட்பட பல்வேறு திட்டங்கள் இம்மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தேனி மாவட்டம் கும்பக்கரையில் இருந்து அடுக்கம் வரை சாலை அமைக்கும் பணி விரைவில் முடிவடையும். இதன் மூலம் பெருமாள்மலை வழியாக கொடைக்கானலுக்கு மேலும் ஒரு சாலை அமைக்கப்படும். கும்பக்கரையில் இருந்து அடுக்கம், பெருமாள் மலை வழியாக ரூ.100 கோடியில் இந்த சாலை அமைக்கப்பட்டு, விரைவில் போக்குவரத்து துவக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.