லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்காவிட்டால் வேலைநிறுத்த போராட்டம்: மாநில தலைவர் பேட்டி
8/6/2025 2:33:19 PM
நாமக்கல்: லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்காவிட்டால் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என நாமக்கல்லில் மாநில தலைவர் தெரிவித்தார். நாமக்கல்லில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா ஊரடங்கு காலத்தில் டீசல் விலை லிட்டருக்கு 13 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மாநில அரசு மதிப்பு கூட்டு வரியை உயர்த்தியுள்ளது. தமிழகத்தில் பெரிய தொழிற்சாலைகள் திறக்கப்படாததால், 50 சதவீத லாரிகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான லாரி உரிமையாளர்கள் பெரும் சிரமத்தில் உள்ளாகி, லாரிகளை இயக்க முடியாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
லாரிக்கான காலாண்டு வரியை, ஏற்கனவே 2 முறை செலுத்தியுள்ளோம். தற்போது லாரி தொழில் மிகவும் நலிவடைந்து உள்ளதால், 3வது முறைக்கான காலாண்டு வரியை மாநில அரசு ரத்து செய்ய வேண்டும். லாரிகள் விபத்துக்களை சந்திக்காத வகையில், எதிரொலிக்கும் ஸ்டிக்கரை ஒட்ட வேண்டும் என மத்திய அரசு உத்தர விட்டுள்ளது. மற்ற மாநில அரசுகள் இந்த உத்தரவை கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் தமிழகத்தில் உடனடியாக அமல்படுத்தப்பட்டுவிட்டது. பெங்களூரை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட தனியார் கம்பெனியில் மட்டும்தான், ஸ்டிக்கர் வாங்கி ஒட்ட வேண்டும் என அறிவித்துள்ளது. இதனால் லாரி ஒன்றுக்கு 6 ஆயிரம் வரை செலவாகும்.
மத்திய அரசு டீசல் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும். ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்ட, வாகன கடனுக்கான கால அவகாசத்தை மேலும் 6 மாத காலம் நீட்டிக்க வேண்டும். கொரோனா காலத்தில் வாகனங்கள் ஓடாததால் சாலை விபத்துக்கள் குறைந்துள்ளதால், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அதிக லாபத்தில் இயங்கி வருகின்றன. எனவே லாரிகளுக்கு இன்சூரன்ஸ் புதுப்பித்தல் 6 மாத காலத்திற்கு தள்ளி வைக்க வேண்டும். மத்திய அரசு வாகனங்களுக்கான ஓட்டுனர் உரிமம், தேசிய அனுமதி சான்று, வாகன புதுப்பித்தல் சான்றுகள் ஆகியவற்றை மேலும் 6 மாத காலத்திற்கு நீட்டிக்க வேண்டும்.
இந்த கோரிக்கையை இன்னும் இரண்டு வார காலத்தில், மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் வரும் 20ம் தேதி நாமக்கல்லில் நடைபெறும், மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும். அது வேலைநிறுத்தப் போராட்டமாக இருக்கும். இவ்வாறு குமாரசாமி கூறினார். அப்போது மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளர் வாங்கிலி, பொருளாளர் தன்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.