அயோத்தியில் கோலாகல விழா: ராமர்கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி
8/5/2025 2:21:38 PM
* அமைச்சர்கள், சாமியார்கள், தலைவர்கள் குவிந்தனர்
* நகர் முழுவதும் விழாக்கோலம்
அயோத்தி: அயோத்தியில் பிரதமர் மோடி இன்று காலை ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார். இதற்கான விழாவால் அந்த நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமருக்கு கோயில் இருந்ததாக கூறப்படும் 2.77 ஏக்கர் நிலத்தின் உரிமை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கின் சட்டப்போராட்டம் கடந்தாண்டு நவம்பர் மாதம் முடிவுக்கு வந்தது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்த உச்சநீதிமன்றம், இதற்காக அறக்கட்டளை ஒன்றை அமைக்க அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி ‘ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற பெயரில் மத்திய அரசு அறக்கட்டளை ஒன்றை நிறுவியது.
அயோத்தி ராமஜென்ம பூமியில் ராமருக்கு 161 அடி உயரத்தில் பிரமாண்ட கோயில் கட்ட அறக்கட்டளை சார்பில் கட்டுமான பணிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதன்படி இன்று (ஆக.5) ராமர் கோயிலுக்கான பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடத்த தீர்மானிக்கப்பட்டது. ஆனால், நாட்டில் கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக மிகமிக முக்கிய பிரபலங்கள், சாமியார்கள் என 175 பேருக்கு மட்டுமே அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. மேலும் விழாவுக்கான ஏற்பாடுகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு நேற்று முன்தினம் முதல் ராமர் கோயில் பூமி பூஜைக்கான சடங்குகள் தொடங்கின.
தொடர்ந்து நடந்து வரும் இந்த சடங்குகளின் நிறைவாக இன்று (புதன்கிழமை) பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் தொடங்கியது. முன்னதாக சரயு நதிக்கரை, நகர வீதிகள், ராமஜென்மபூமி சுற்றுவட்டாரங்கள் என மாவட்டம் முழுவதும் ராமாயண காட்சிகள், ராமர் படங்கள் சுவர்களில் வரையப்பட்டும், வீதி முழுவதும் கோலமிட்டும் அலங்கரிக்கப்பட்டு உள்ளன. நேற்றிரவில் வண்ண விளக்குகளால் ஒளியேற்றியும், அகல் விளக்கேற்றியும் இருந்ததால் அயோத்தி முழுவதும் ஒளி வெள்ளத்தில் மிதந்தது. பிரதமர் மோடி மற்றும் ஏராளமான முக்கிய தலைவர்கள் பங்கேற்றதால் அயோத்தியில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அயோத்தி மாவட்டம் முழுவதுமே ஏற்கனவே சீல் வைக்கப்பட்டது.
பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு பாதுகாப்பு வளையத்துக்குள் அயோத்தி கொண்டு வரப்பட்டது. ராமர் கோயில் பூமி பூஜையில் பங்கேற்பதற்காக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், துணைத்தலைவர் பையாஜி ஜோஷி, உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்தி பென் படேல், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநில முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் உமா பாரதி, சாமியார் தாம்ரா, அயோத்தி நில தகராறு வழக்கில் முக்கிய வழக்கறிஞர்களில் ஒருவரான இக்பால் அன்சாரி, விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள், பாஜக தலைவர்கள், பாபா ராம்தேவ் உள்ளிட்ட சாமியார்கள் வந்திருந்தனர்.
விழாவின் சிறப்பு அழைப்பாளரான பிரதமர் மோடி இன்று காலை 9.30 மணியளவில் விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம் டெல்லியில் இருந்து லக்னோ கிளம்பினார். அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி கிளம்பிய அவர் 11.30 மணியளவில் அங்குள்ள சாகேத் கல்லூரி மைதானத்தில் தரை இறங்கினார். பின்னர் அங்கிருந்து அனுமன்ஹார்கி கோயிலுக்கு சென்ற அவர், சுமார் 10 நிமிடங்கள் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். சிறிது நேரம் கழித்து அங்கிருந்து 12 மணியளவில் ராமஜென்ம பூமிக்கு சென்று அங்கு ராம்லல்லா (குழந்தை ராமர்) கோயிலில் வழிபாடு செய்தார். மேலும், அங்கு மரக்கன்று ஒன்றையும் நட்டு வைத்தார்.
தொடர்ந்து மதியம் 12.30 மணியளவில் ராமர் கோயில் பூமி பூஜையில் முக்கிய நிகழ்வான கோயிலுக்கான அடிக்கல்லை (வெள்ளியாலான செங்கல்) நாட்டினார். பின்னர் விழாவின் நினைவாக சிறப்பு தபால் தலைகளை வெளியிட்டார். அதன்பின், அறக்கட்டளை நிர்வாகிகளுடன் 1.30 மணியளவில் ஆலோசனை நடத்திவிட்டு மதியம் 2.05 மணியளவில் அயோத்தியில் இருந்து புறப்பட்டார். பின்னர் மீண்டும் சாகேத் கல்லூரிக்கு காரில் திரும்பி, பிற்பகல் 2.20 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் லக்னோ திரும்பினார். அங்கிருந்து டெல்லி புறப்பட்டு சென்றார்.
பூமி பூஜை ‘ஹைலைட்ஸ்’
* ராமர் கோயில் பூமி பூஜை அடிக்கல் நாட்டும் விழாவைக் கொண்டாடும் ஒரு நிகழ்வாக, அமெரிக்காவில் உள்ள இந்திய சமூகத்தினர் வாஷிங்டனில் வெள்ளை மாளிகையின் ேகபிடல் ஹில்லுக்கு வெளியே ஒன்று கூடி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். கனடாவின் வான்கூவரில் உள்ள பாமேஸ்வரி கோயிலில் சிறப்பு பூஜை நடந்தன.
* மேற்குவங்க அரசு இன்று முழுமையான ஊரடங்குக்கு உத்தரவிட்டுள்ளது. விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி) மற்றும் சில அமைப்புகள் ராமர் கோயில் பூமி பூஜை நிகழ்வைக் கொண்டாடுவதற்காக, அங்குள்ள கோயில்களில் மத சடங்குகளை செய்வதாக அறிவித்தன. இது அயோத்தியில் பூமி பூஜை நாளில் ேமற்குவங்கத்தில் மோதலுக்கு வழிவகுக்கும் என்பதால், ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த தளர்வுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
* மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வெளியிட்ட டுவிட் பதிவில், ‘இந்திய அரசியலமைப்பின் அசல் ஆவணத்தில் ராமர், சீதா மற்றும் லக்ஷ்மன் ஆகியோர் ராவணனை தோற்கடித்து அயோத்தி திரும்பிய அழகிய ஓவியத்தை கொண்டுள்ளனர். இது அடிப்படை உரிமைகள் தொடர்பான அத்தியாயத்தின் தொடக்கமாக உள்ளது. இதை உங்கள் அனைவருடனும் பகிர்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
* உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து இன்று கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்துள்ளது. மோடி பிரதமரான பிறகு அயோத்தியில் முதன்முறையாக சாமி தரிசனம் செய்துள்ளார். ஏற்கனவே தேர்தல் நேரங்களில் பலமுறை அயோத்தி சென்றிருந்தாலும் சர்ச்சையை தவிர்ப்பதற்காக அங்கு சாமி தரிசனம் செய்வதை தவிர்த்து வந்தார்.