முதல்வர் எடப்பாடிக்கு கொரோனா இல்லை: நேற்று நடந்த பரிசோதனையில் உறுதி
7/14/2020 2:53:34 PM
சென்னை: முதல்வர் எடப்பாடிக்கு கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தினசரி 4,200க்கும் மேற்பட்டோர் சராசரியாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். சென்னையில் கடந்த வாரம் வரை தினசரி 2 ஆயிரம் இருந்த எண்ணிக்கை தற்போது 1,000 தொடும் அளவுக்கு குறைந்துள்ளது. தற்போது சென்னை தவிர பல மாவட்டங்களில் வேகமாக பரவி வருகிறது. அதேநேரம், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் உள்பட பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
முதல்வர் அலுவலக தனி செயலாளர் ஒருவர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த மாதம் மரணம் அடைந்தார்.
மேலும் தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மூத்த அமைச்சர்கள் தங்கமணி, செல்லூர் ராஜு, கே.பி.அன்பழகன் உள்ளிட்ட மூன்று அமைச்சர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதையொட்டி முதல்வர் எடப்பாடியும் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து அவ்வப்போது கொரோனா பரிசோதனை செய்து, தனக்கு நோய் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பிறகே தலைமை செயலகம் வந்து பணிகளை தொடர்கிறார்.
இந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. முன்னதாக முதல்வர் எடப்பாடிக்கு நேற்று கொரோனா தொற்று உள்ளதா? என்று சுகாதார துறை அதிகாரிகள், சென்னையில் உள்ள அவரது முகாம் அலுவலகத்திற்கு வந்து கொரோனா பரிசோதனை (பிசிஆர்) செய்தனர். அதன் முடிவு இன்று காலை தெரிவிக்கப்பட்டது. அதில், முதல்வருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல்வரின் முகாம் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு உயர் அதிகாரிகள், பணியாளர்கள், காவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அவர்களுக்கும் கொரோனா தொற்று இல்லை எனபது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அனைத்து அமைச்சர்களும் அவ்வப்போது கொரோனா பரிசோதனை செய்து கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். சில அமைச்சர்கள், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.