முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மாலை நடக்கிறது; ஊரடங்கு தளர்வு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க ஆலோசனை
7/13/2020 2:23:01 PM
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மாலை நடக்கிறது. அதில் தமிழகத்தில் மேலும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் வருகிற 31ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும், கொரோனா வைரஸ் பரவும் வேகத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. குறிப்பாக சென்னை மற்றும் அதை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் மதுரை உள்ளிட்ட நகர் பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்ததன் காரணமாக, கடந்த மாதம் 19ம் தேதியில் இருந்து கடந்த 5ம் தேதி வரை 17 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதற்கு ஒரு வகையில் நல்ல பலன் கிடைத்தது. சென்னையில் தினசரி நோயின் தாக்கம் 2000 என்று இருந்த நிலை மாறி, தற்போது தினசரி சராசரியாக 1,200 பேர் என்ற அளவில் குறைந்துள்ளது.
அதே நேரம் உயிரிழப்பு தினசரி 60ஐ தாண்டி செல்வது மக்கள் மத்தியில் பெரும் பீதியை உருவாக்கியுள்ளது. சென்னையில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தென்மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக மதுரையில் பாதிப்பு அதிகமாகி வருகிறது. மேலும் கிராமப்புறங்களில் தொற்று அதிகரித்து வருவது மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தின் 10வது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதில், தமிழகத்தில் கொரோனா தொற்றின் வேகத்தை கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டு முடிவுகள் எடுக்கப்படுகிறது. மேலும், கிராமப் பகுதிகளில் ஆண்டுக்கு 10 ஆயிரத்துக்கும் குறைவாக வருமானம் வரும் கோயில்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதை மேலும் விரிவுபடுத்தி பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள கோயில்களையும் திறக்க அனுமதி அளிப்பது குறித்தும் விவாதிக்கப்படுகிறது. மேலும் பஸ்கள் இயக்கம் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் கடந்த 4 மாதங்களாக பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படவில்லை.
அதனால் பள்ளி, கல்லூரிகளை எப்போது திறக்கலாம்? தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது போன்று அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு என்ன வசதிகளை ஏற்படுத்தி தரலாம்? கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வை நடத்தலாமா உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நாளை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. மேலும், ஜூலை 31ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை தமிழகத்தில் மேலும் நீட்டிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது. ஆகஸ்டு மாதத்தில் இருந்து தமிழகத்தில் பல்வேறு புதிய தளர்வுகளை அறிவிப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.