ஊரடங்கை மீறிய அமைச்சரின் மகன், நண்பர்கள்; மோடியே வந்தாலும் தடுத்து நிறுத்துவேன்...! எச்சரிக்கை விடுத்த பெண் காவலர் இடமாற்றம்
7/13/2020 2:19:47 PM
சூரத்: ஊரடங்கை மீறி வெளியே வந்த குஜராத் அமைச்சரின் மகனை பெண் காவலர் ஒருவர் எச்சரிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி
வருகிறது. குஜராத் மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் குமார் கனானி. இவரது மகன் பிரகாஷ் கனானி. ஊரடங்கை மீறி பிரகாஷ் கனானியின் நண்பர்கள் சூரத் நகரில் இரவு நேரத்தில் சாலையில் சுற்றித்திரிந்தனர். அவர்களை சூரத் போலீஸ் நிலைய பெண் காவலர் சுனிதா தடுத்து நிறுத்தினார். இதனை அறிந்த அமைச்சரின் மகன் சம்பவ இடத்திற்குச் சென்று அந்த பெண் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
அப்போது சுனிதா, ‘கொரோனா ஊரடங்கு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? இந்த சமயத்தில் பிரதமர் மோடியே வந்தாலும் தடுத்து நிறுத்துவேன்’ என்று கூறி உள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவுக்கு சமூக ஊடகங்களில் அமைச்சரின் மகனுக்கு எதிராகவும், சுனிதாவிற்கு ஆதரவாகவும் பலர் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த சூழலில் அமைச்சரின் மகன் பிரகாஷ் கனானியும், அவரது இரு நண்பர்களும் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 188 (சட்டத்தை மீறியது), இந்திய தண்டனை சட்டம் 269, 270 (உயிருக்கு ஆபத்தான நோய்த்தொற்றை பரப்புவது ) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு சூரத் காவல் ஆணையர் ஆர்.பி.பிரம்பாட் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே, அமைச்சர் மகனையும், அவரது இரண்டு நண்பர்களையும் தடுத்து நிறுத்தியதற்காக பெண் காவலர் இடமாற்றம் செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.