2 வியாபாரிகள் கொலை வழக்கு; கோவில்பட்டி கிளை சிறையில் மாஜிஸ்திரேட் திடீர் விசாரணை
7/12/2025 2:40:30 PM
கோவில்பட்டி: சாத்தான்குளத்தில் விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீசார் நடத்திய கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இவ்வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்ததரவின்பேரில், கோவில்பட்டி ஜேஎம் 1 கோர்ட் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தினார்.
இதனிடையே இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இருப்பினும் அதுவரை சாட்சியம், தடயங்களை பாதுகாக்கும் பொருட்டு இவ்வழக்கை விசாரிக்குமாறு சிபிசிஐடி போலீசாருக்கு நீதிமன்றம் ஆணையிட்டது. அதன்பேரில் கொலை வழக்குப் பதிவுசெய்த சிபிசிஐடி போலீசார், கள விசாரணை நடத்தி சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐகள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் என 10 காவலர்களை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
நேற்று முன்தினம் இவ்வழக்கை ஏற்றுக்கொண்ட சிபிஐ போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணையை துவங்கிய நிலையில், கோவில்பட்டி கிளைச் சிறையில் ஜேஎம் 1 கோர்ட் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் நேற்று காலை 10.45 மணிக்கு திடீரென வருகைதந்து விசாரணை நடத்தினார்.
இந்த விசாரணையில், ஜெயராஜ், பென்னிக்ஸ் சிறைக்கு கொண்டு சென்றபோது ஒப்படைக்கப்பட்ட ஆவணங்கள், மருத்துவச் சான்று ஆவணங்கள் உள்ளிட்டவற்றை மாஜிஸ்திரேட் பாரதிதாசன் பார்வையிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் சிறையில் உள்ள ஒரு சில விசாரணை கைதிகளிடமும் அவர் விசாரணை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. வழக்கு சிபிஐக்கு சென்ற நிலையில் கோவில்பட்டி கிளை சிறையில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் திடீரென விசாரணை மேற்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.