மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் சென்னைக்கு வரும் விமானத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
7/11/2025 2:25:59 PM
மீனம்பாக்கம்: கொரோனா ஊரடங்கால் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தடைப்பட்டிருந்த விமான சேவைகள் கடந்த மே 25ம் தேதியில் இருந்து குறைந்தளவு விமான சேவைகளுடன் இயக்கப்பட்டது. ஆனால் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. சென்னையில் கொரோனா வேகமாக பரவி வந்ததால் பலர் சொந்த ஊர்களுக்கு படையெடுத்த வண்ணம் இருந்தனர்.
இதனால் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகமாகவும் சென்னைக்கு வரும் விமானங்களில் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. இதனால் வெளியூர்களிலிருந்து பல உள்நாட்டு விமானங்கள் காலியாகவே இயக்கப்பட்டன.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் ஓரளவு குறைந்துள்ளது. அதே நேரத்தில், மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இதையடுத்து கடந்த 2 நாட்களாக வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உள்நாட்டு விமான நிலையத்துக்கு நேற்று வந்த 28 விமானங்களில் 2,300 பேர் சென்னைக்கு வந்தனர். இன்று சென்னைக்கு வரும் 28 விமானங்களில் 2,450 பேர் முன்பதிவு செய்துள்ளனர். கடந்த 10 தினங்களுக்கு முன்பு சென்னைக்கு வரும் விமானங்களில் பயணிகள் எண்ணிக்கை 1,500க்கும் குறைவாகவே இருந்தது. சென்னையில் இருந்து செல்லும் விமானங்களில் பயணிகளின் எண்ணிக்கை 3,000க்கும் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் ஓரளவு குறைந்ததாலும், மற்ற மாவட்டங்களில் அதிகரிப்பதாலும் வெளியூர் சென்ற பலர் மீண்டும் சென்னைக்கு திரும்புவதாகவும் கூறப்படுகிறது.