ம.பி-யில் இருந்து கான்பூர் அழைத்து சென்ற போது தப்பி ஓட முயன்ற தாதா என்கவுன்டரில் சுட்டுக்கொலை; ஒரு வாரத்தில் தீர்த்துக் கட்டிய உத்தரபிரதேச போலீஸ்
7/10/2025 2:39:24 PM
லக்னோ: மத்திய பிரதேசத்தில் இருந்து கான்பூர் அழைத்து சென்ற போது ஏற்பட்ட விபத்தில், போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓட முயன்ற ரவுடி கும்பல் தலைவன் விகாஸ் துபே போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். இச்சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் பிரபல ரவுடி விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகளால் கடந்த 2ம் தேதி இரவு, டிஎஸ்பி உள்பட 8 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் 7 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகளை பிடிக்க 25-க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் களத்தில் இறக்கப்பட்டனர். இதில் விகாஸ் துபேயின் 2 கூட்டாளிகள் 3ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டனர். இதைப்போல அவனது வலது கரமாக விளங்கிய தயாசங்கர், போலீசார் வருகை பற்றி துபேவுக்கு துப்பு கொடுத்த போலீஸ்காரர்கள் என பலர் கைது செய்யப்பட்டனர். ஆனாலும் முக்கிய குற்றவாளியான விகாஸ் துபே போலீசிடம் சிக்காமல் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்தான். இந்நிலையில் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் நேற்று அந்த மாநில போலீசார் விகாஸ் துபேயை அதிரடியாக கைது செய்தனர். அங்குள்ள புகழ்பெற்ற மகா காளி கோயிலுக்கு தனது கூட்டாளிகள் இருவருடன் வந்தபோது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் விகாஸ் துபேயை பிடித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட விகாஸ் துபே, இன்று அதிகாலை கான்பூருக்கு அழைத்து வரப்பட்டான். கான்பூர் நெடுஞ்சாலையில் உள்ள டோல்கேட் வந்தபோது போலீஸ் வாகனத்தை மட்டும் அனுமதித்துள்ளனர். போலீசாரை பின் தொடர்ந்து கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பத்திரிகையாளர்கள் விசாரித்தபோது நெடுஞ்சாலையில் விபத்து நடந்திருப்பதாகவும் அதனால் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என்றும் டோல்கேட்டில் இருந்த போலீசார் தெரிவித்தனர். நீண்ட நேரத்திற்கு பின்புதான் கான்பூருக்கு காரில் ரவுடி விகாஸ் துபேவை அழைத்து வந்த போது, பாதுகாப்பு பணிக்கு வந்த கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தை பயன்படுத்தி, விகாஸ் துபே போலீசார் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்துக் கொண்டு தப்பி ஓட முயன்றுள்ளதாக கூறப்படுகிறது. போலீசார் எச்சரித்தபோதும், கேட்காமல் தப்பிச் செல்ல முயன்றதால், போலீசார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அவனும் போலீசாரை நோக்கி சுட்டதாக கூறப்படுகிறது. இந்த மோதலில், விகாஸ் துபே சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். சாலை விபத்தில் காயமடைந்தவர்கள் லாலா லஜ்பத் ராய் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர். இதில், காயமடைந்த 2 போலீசாரும் அடங்கும்.
முன்னதாக விகாஸ் துபேவை அழைத்து சென்ற போலீசாரின் வாகனம், கான்பூரின் பார்ரா காவல் நிலையம் அருகே சச்செண்டி நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கான்பூர் ஐ.ஜி. மோஹித் அகர்வால், ரவுடி விகாஸ் துபே சுட்டுக் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட விகாஸ் துபேவை மத்திய பிரதேசத்தில் இருந்து கான்பூர் அழைத்து சென்ற போது, வாகனம் விபத்துக்குள்ளானது. அப்போது அவன் போலீசின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றான். பாதுகாப்பில் இருந்த போலீசாரின் துப்பாக்கியை பறித்தான். அதனை ெதாடர்ந்து நடந்த துப்பாக்கி சூட்டில், விகாஸ் துபே சுட்டுக் கொல்லப்பட்டான்’ என்றார். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அதிகாலை கான்பூரில் ரவுடி கும்பல் தலைவன் விகாஸ் துபே கும்பலை கைது செய்ய முயன்றபோது 8 போலீசார் ரவுடிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். கான்பூரில் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து துபேயின் இரண்டு கூட்டாளிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
நேற்று மத்திய பிரதேசத்தில் கைதான விகாஸ் துபே, நேற்றிரவு கான்பூர் அழைத்து வந்த போது போலீஸ் வாகனம் விபத்துக்குள்ளானது. அப்போது தப்ப முயன்ற விகாஸ் துபே, போலீசாரின் துப்பாக்கி சூட்டில் காயமடைந்தான். கான்பூர் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, அவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். கடந்த வெள்ளிக்கிழமை 8 போலீசார் ெகால்லப்பட்ட நிலையில், இந்த வெள்ளிக்கிழமை (இன்று) ரவுடி கும்பல் தலைவன் விகாஸ் துபே சுட்டுக் கொல்லப்பட்டான்’ என்றனர்.கடந்த ஒரு வாரமாக உத்தரபிரதேச போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்த இந்த விவகாரம் முடிவுக்கு வந்துள்ளதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரவுடி கும்பல் தலைவன், அவனது கூட்டாளிகள் சிலர் என்கவுன்டரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 15க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். நேற்று விகாஸ் துபே கைது செய்யப்பட்டவுடன், அவர்களது உறவினர்கள் உத்தரபிரதேச போலீசாரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.