59 சீன செயலிகள் தடையை தொடர்ந்து பேஸ்புக் உட்பட 89 ‘ஆப்ஸ்’ பயன்படுத்த வீரர்களுக்கு தடை: இந்திய ராணுவம் அறிவிப்பு
7/9/2025 2:29:52 PM
புதுடெல்லி: இந்தியாவில் டிக்டாக், யுசி பிரவுசெர், ஹலோ சாட் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்ததின் தொடர்ச்சியாக 89 செயலிகளை ராணுவ வீரர்கள் பயன்படுத்த இந்திய ராணுவம் தடை விதித்துள்ளது. லடாக் எல்லை அருகே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய - சீன வீரர்களிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். சீனா தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் அதன் விவரங்களை அவர்கள் வெளியிடவில்லை. இதற்கிடையே, இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, சீனப் படைகள் கல்வான் மோதல் நடத்த பகுதியில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திற்குப் பின்னோக்கி சென்றன.
இந்நிலையில் இந்திய ராணுவத்தினர் பேஸ்புக், இன்ஸ்டாகிரம் உள்ளிட்ட 89 செயலிகளை தங்கள் ஸ்மார்ட் போன்களில் இருந்து நீக்க வேண்டும் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ராணுவ தகவல்கள் கசிவதை தடுக்கும் வகையில், பேஸ்புக், டிக்டாக், ட்ரூ காலர், இன்ஸ்டாகிராம், வி சாட், ஹலோ சாட், ஷேர் சாட், ஹைக், ஷேர் ஹிட், செண்டெர், யூசி பிரவுசெர், யுசி பிரசெர் மினி, ஷூம், கேம் ஸ்கேன்னர், பியூட்டி பிளஸ், பப்ஜி, கிளாஸ் ஆஃப் கிங்ஸ், மொபைல் லிஜெண்ட்ஸ், கிளப் ஃபேக்டரி, டிண்டெர், 360 செக்யூரிட்டி, ஸ்நாப் சாட், தம்பிர், ரெட்டிட் உள்ளிட்ட 89 செயலிகளை ராணுவ வீரர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் இருந்து நீக்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன், இந்தியாவில் டிக்டாக், யுசி பிரவுசெர், ஹலோ சாட் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. அதன் தொடர்ச்சியாக 89 செயலிகளை ராணுவ வீரர்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.