சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கு: ஜி.ஹெச். டாக்டர்களிடம் மருத்துவத்துறை துணை இயக்குநர் விசாரணை
7/7/2025 2:24:33 PM
சாத்தான்குளம்: சாத்தான்குளத்தில் போலீஸ் தாக்குதலில் வியாபாரிகளான தந்தை - மகன் இறந்த விவகாரத்தில் சாத்தான்குளம், கோவில்பட்டி அரசு மருத்துவமனை டாக்டர்களிடம் மருத்துவத்துறை துணை இயக்குநர் விசாரணை நடத்தினார். சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர். இந்த இரட்டைக் கொலை தொடர்பாக விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார், சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் தர், எஸ்ஐக்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், ஏட்டு முருகன், காவலர் முத்துராஜா ஆகிய 5 பேர் மீது கொலை வழக்கு பதிந்து, கைது செய்து சிறையில் அடைந்தனர். இதற்கிடையே தந்தை, மகன் கொலை வழக்கில் போலீஸ் நண்பர்கள் குழுவுக்கும் தொடர்பிருப்பதாக புகார் எழுந்ததையடுத்து சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த 5 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
இவர்கள் தவிர பென்னிக்சின் நண்பர்களான ரவிசங்கர், ரவிச்சந்திரன், மணிமாறன், சங்கரலிங்கம், ராஜாராமன் ஆகிய 5 பேரிடம் நேற்று 2வது நாளாக விசாரணை நடந்தது. கடந்த ஜூன் 19ம் தேதி அன்று தந்தை, மகன் 2 பேரும் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கும், சாத்தான்குளம் மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கும் கொண்டு வரப்பட்டனர். சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அரசு டாக்டர் வினிலா இருவருக்கும் உடல் தகுதி சான்று கொடுத்துள்ளார். இதுபோல் ரத்தம் சொட்ட சொட்ட இருந்தவர்களை சாத்தான்குளம் மாஜிஸ்திரேட் சரவணன் நேரில் பார்க்காமலேயே கோவில்பட்டி சிறையில் அடைக்க உத்தரவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் சாத்தான்குளம் அரசு டாக்டர் வினிலா மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார்.
இதுகுறித்து மருத்துவப் பணிகள் துணை இயக்குநர் பொன் இசக்கி கூறியதாவது: சாத்தான்குளம் அரசு மருத்துவமனை, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ஜூன் 19ம் தேதி சாத்தான்குளம் போலீசாரால் அழைத்து வரப்பட்ட ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோருக்கு அளித்த சிகிச்சை குறித்து சம்பந்தப்பட்ட டாக்டர்கள், நர்ஸ்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அது குறித்த அறிக்கை மருத்துவ இயக்குநருக்கு அனுப்பப்படும். மருத்துவ இயக்குனரகம் தான் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.