சாத்தான்குளத்தில் 2 வியாபாரிகள் கொலை சிசிடிவி கேமரா பதிவு காவலர் உள்பட 3 பேரிடம் மாஜிஸ்திரேட் விசாரணை
7/3/2025 2:37:41 PM
திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை, மகனான வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு நேரத்தை தாண்டி கடந்த மாதம் 19ம் தேதி இரவு கடைகளை திறந்து வைத்ததாக இருவரையும் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீசார் சரமாரியாக தாக்கி கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர். அங்கு அடுத்தடுத்து இருவரும் உயிரிழந்தனர். வியாபாரிகள் இறந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் தர், எஸ்ஐக்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் மற்றும் இரு காவலர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தி வருகிறார். இதில் கொலை வழக்கிற்கு பல ஆதாரங்கள் சிக்கின. ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை சிறையில் அடைக்க மருத்துவச் சான்று வழங்கிய சாத்தான்குளம் அரசு டாக்டர் வினிலா, காவல் நிலைய எழுத்தர் பியூலா ஆகியோரிடம் நேற்று முன்தினம் திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் நீதிபதி பாரதிதாசன் விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிசிடிவி கேமரா ஆபரேட்டராக பணியாற்றிய காவலர் தாமஸ் பிரான்சிஸ் நேற்று மதியம் 2.45 மணிக்கு திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன், சிசிடிவி பதிவுகள் அழிந்தது எப்படி என்ற கோணத்தில் விசாரணை நடத்தினார். தொடர்ந்து காவல் நிலைய ஜீப் டிரைவர் ஜெயசேகர், காவலர் அழகுமாரி செல்வம் ஆகியோரிடம் நேற்று மாலை விசாரணை நடத்தினார். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தடயங்கள் அழிப்பு
சாத்தான்குளம் போலீசார் வியாபாரிகள் இருவரையும் தாக்கியதில் லத்தி, மேஜை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரத்தம் சொட்டியுள்ளது. இந்த ரத்தக்கறையை போலீசார் அழித்துள்ளனர். இது தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலைய தற்காலிக தூய்மை பணியாளர் வேல்முருகன் என்பவரிடம், ரத்தக்கறைகள் சுத்தம் செய்யப்பட்டதா என மாஜிஸ்திரேட் நேற்று விசாரணை நடத்தினார். இவர் மாற்றுத்திறனாளி என்ற போதிலும் சைகை மூலம் பல்வேறு விஷயங்கள் குறித்து சாட்சியம் அளித்தார். அதை மாஜிஸ்திரேட் பதிவு செய்தார்.