போலீசார் தாக்கியதில் 2 வியாபாரி சாவு: மாவட்ட முதன்மை நீதிபதி விசாரணை
6/28/2020 2:41:59 PM
சாத்தான்குளம்: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் ஊரடங்கு விதிமுறையை மீறி கடைகளை திறந்து வைத்ததாகக் கூறி போலீசார் இருவரையும் கடந்த 19ம்தேதி கைது செய்து சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர்களை சாத்தான்குளம் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி கோவில்பட்டி சிறையில் அடைத்தனர். அங்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு 22ம் தேதி இரவில் பென்னிக்சும், 23ம் தேதி அதிகாலையில் ஜெயராஜூம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து இறந்தனர். போலீஸ் தாக்கியதால் வியாபாரிகள் இறந்த தகவல் தமிழகம் முழுவதும் வியாபாரிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தந்தை, மகன் சாவுக்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடந்தது.
இதற்கிடையே மதுரை ஐகோர்ட் கிளை தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் விசாரித்தனர். நேற்று முன்தினம் மீண்டும் இந்த வழக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைக்கு வந்தது. இதில், ‘‘கோவில்பட்டி 1வது மாஜிஸ்திரேட் சாத்தான்குளத்திற்கு நேரில் சென்று அங்கு சாட்சிகளிடம் நேரடி விசாரணை நடத்தி, அதை பதிவு செய்ய வேண்டும். கோவில்பட்டி சிறை, சாத்தான்குளம் போலீஸ் நிலையம் ஆகிய இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்து பாதுகாக்க வேண்டும். இந்த வழக்கு வருகிற 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.’’ என்றனர். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி லோகேஸ்வரன், ஜெயராஜ் வீட்டுக்கு சென்று அவரது மனைவி, மகள்களிடம் விசாரணை நடத்தினார்.
பின்னர் சாத்தான்குளம் நீதிமன்றம், போலீஸ் நிலையம், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் நடத்தி வந்த கடைகளையும் பார்வையிட்டார். ஐகோர்ட் உத்தரவின்பேரில் நேற்று கோவில்பட்டி குற்றவியல் நடுவர் எண் 1 மாஜிஸ்திரேட் பாரதிதாசன், தூத்துக்குடி குற்றவியல் மாஜிஸ்திரேட் ஹேமா ஆகியோர் கோவில்பட்டி சிறைக்கு சென்றனர். அங்கு தந்தை, மகன் சேர்க்கப்பட்டதற்கான ஆவணங்களை ஆய்வு செய்தனர். பின்னர் அங்கிருந்த சிறை கண்காணிப்பாளர் சங்கர், வார்டன்களிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை மாலை வரை நடந்தது.