சீனாவின் பிரபல சமூக வலைதளங்களில் பிரதமர் மோடியின் கருத்துக்கு தடை: எல்லை பிரச்னை தொடர்பான பதிவுகள் நீக்கம்
6/21/2020 2:20:46 PM
புதுடெல்லி: சீனாவின் சமூக வலைதளங்களில் பிரதமர் மோடி தொடர்பான அறிக்கை, கருத்து, செய்திகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய - சீன எல்லை பிரச்னை தொடர்பான பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன. இந்திய - சீன எல்லையில் உள்ள லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதலில் சீன வீரர்கள், இரும்பு கம்பிகள், கற்கள் மூலம் இந்திய ராணுவத்தினரை தாக்கினர். இதில் தமிழக வீரர் பழனி உள்பட 20 பேர் உயிரிழந்தார்கள். இதன்பின்னர் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘சீனா நமது எல்லைக்குள் ஊடுருவவில்லை. நமது நிலையையும் கைப்பற்றவில்லை. எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சீனாவின் நடவடிக்கை ஒட்டு மொத்த தேசத்தையும் காயப்படுத்தியுள்ளது. இந்திய வீரர்களின் தியாகம் வீண் போகாது. இந்த விவகாரத்தில் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்’ என்று பேசினார்.
இதற்கு பல்வேறு கட்சிகளும் கண்டனங்களை தெரிவித்த நிலையில், ‘பிரதமர் மோடி பேசியது தவறாக பரப்பப்பட்டு வருகிறது. இந்திய ராணுவத்தின் தியாகம் ஒருபோதும் வீண்போகாது’ என்று நேற்று பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், சீன அரசாங்கத்தின் கட்டுப்பாடு மற்றும் தணிக்கைக்கு பெயர் பெற்ற சீன சமூக ஊடகங்கள், இப்போது பிரதமர் மோடியின் பேச்சையும், எல்லை பிரச்னை தொடர்பாக இந்திய அதிகாரிகள் பேசிய கருத்துகளையும், உத்தியோகபூர்வ அறிக்கைகளையும் நீக்கியுள்ளன. இந்திய - சீனா பதற்றம் தொடர்பான எல்லை நிலைமை குறித்த செய்திகளை ‘வி-சாட்’ என்ற சமூக வலைதளத்தில் (டுவிட்டர், பேஸ்புக் போன்று) அதன் பயனர்கள் அணுக முடியாததாகிவிட்டது.
அந்த சமூக வலைதளமான ‘WeChat’-இல் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், ‘இந்த (எல்லை பிரச்னை) உள்ளடக்கம் விதிமுறைகளை மீறுவதால் அதை உங்களால் பார்க்க முடியாது’ என்று, இந்தியா தரப்பு தகவல்களை நீக்கிவிட்டன. கடந்த 2015ம் ஆண்டில் தனது சீன பயணத்திற்கு முன்னதாக, பிரதமர் மோடி சீனாவின் ‘வெய்போ’ சமூக வலைதளத்தில் ஒரு கணக்கைத் ெதாடங்கினார். இது இந்தியாவில் புழக்கத்தில் உள்ள டுவிட்டருக்கு சமமானதாக கருதப்படுகிறது. இருப்பினும், சீனாவுடனான எல்லை பதட்டங்கள் தொடர்பான எந்த உள்ளடக்கத்தையும் இந்த கணக்கு பிரதமர் மோடி வெளியிடவில்லை. மேலும், ‘வெய்போ’ சமூக வலைதளமும் இருநாட்டு எல்லை பிரச்னை தொடர்பான தகவல்களை வெளியிடாமல் தவிர்த்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.