பீகாரை சேர்ந்த பாலிவுட் நடிகர் இறப்பில் திடீர் திருப்பம்சுஷாந்தின் மரணம் தற்கொலை அல்ல... கொலை: நடிகரின் போலீஸ் அதிகாரி மாமன் பகீர் குற்றச்சாட்டு
6/15/2020 2:34:08 PM
மும்பை: மும்பையில் தற்கொலை செய்து கொண்ட பீகாரைச் சேர்ந்த பாலிவுட் நடிகர் சுஷாந்தின் மரணம் கொலை என்று, அவரது மாமனான போலீஸ் அதிகாரி பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை குறித்த படத்தில் நடித்த பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் (34) நேற்று மும்பையில் பாந்த்ரா பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தியத் திரையுலகத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திய இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு துறையைச் சார்ந்தவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ராஜ்புத் கடந்த 6 மாதங்களாகத் தீவிர மன அழுத்தத்தில் இருந்ததால், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும், சுஷாந்த் சிங் இறந்த போது அவருடைய வீட்டில் அவருடன் நண்பர்களும் இருந்ததால் அவர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த போது வீட்டில் பணியாற்றும் வேலைக்காரர்கள் இருவர், ஒரு ஆர்ட் டிசைனர் ஆகியோர் இருந்துள்ளனர். கடந்த ஜூன் 8ம் தேதி சுஷாந்த் சிங்கின் முன்னாள் மேலாளர் திஷா ஷலியன், தனது குடியிருப்பின் 14வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டதால், இவை இரண்டிற்கும் தொடர்பு இருக்குமா? என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காலை 10 மணிக்கு தூங்க செல்கிறேன் என்று கூறிவிட்டு தூங்க சென்றுள்ளார். மதியம் 1.30 மணிக்கு அவர் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பின்பே அவரின் நண்பர்கள் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அதன்பின் அவர் தற்கொலை செய்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல், பீகாரில் இருந்து வந்த அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில், பீகார் மாநிலம் பாட்னாவில் சுஷாந்தின் மாமா கூறுகையில், ‘சுஷாந்த் தற்கொலை செய்து கொள்வார் என்று குடும்பத்தினர் கொஞ்சம் கூட நம்பவில்லை. தற்கொலைக்கு பின்னால் சதி இருப்பதாக தெரிகிறது. அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை, மாறாக அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்’ என்றார். அரியானாவில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் இவர், சுஷாந்தின் மரணம் தொடர்பான விபரங்களை சேகரிக்க, மும்பைக்கு புறப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடைேய, நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று ஜான் ஆதிகர் கட்சியின் (ஜேஏபி) தேசியத் தலைவரும், பீகார் மாநிலத்தின் முன்னாள் எம்.பி.யுமான பாப்பு யாதவ் தெரிவித்தார். அவர் கூறுகையில், ‘சுஷாந்த் சிங் தற்கொலை செய்திருக்க முடியாது. அவரது மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். நான் அவரது தந்தையை பாட்னாவில் 2 மணி நேரம் சந்தித்து பேசினேன். அவரது தந்தை தனது மகனின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று விரும்புகிறார்’ என்றார்.
பாதுகாப்பாக இருங்கள்
நடிகர் சுஷாந்த் சிங் இறப்பதற்கு 3 நாட்களுக்கு முன் பாட்னாவில் உள்ள தன் தந்தை கே.கே.சிங்கிடம் ேபசியுள்ளார். பின்னர் வீட்டு உதவி பெண் லட்சுமி தேவியிடம், ‘தயவுசெய்து என் தந்தையை கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து பாதுகாக்க மிகவும் கவனமாக இருங்கள்’ என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், நேற்று மதியம் மதிய உணவுக்காக அவரது தந்தை உட்கார்ந்திருந்த போது, மும்பையிலிருந்து போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய போலீஸ் அதிகாரி, ‘சுஷாந்த் அவரது பாந்த்ரா வீட்டில் இறந்துள்ளார்’ என்று தெரிவித்தார். இதைகேட்டு அதிர்ச்சியில் அவரது தந்தை மயக்கமடைந்தார். ஓய்வுபெற்ற அரசு ஊழியரான கே.கே.சிங், பல ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யாரும் உங்கள் நண்பர் இல்லை
சுஷாந்த் சிங்கின் மரணம் குறித்து டுவிட் செய்துள்ள பிரபல சிகை அலங்கார நிபுணர் சப்னா பவானி, ‘கடந்த சில ஆண்டுகளாக சுஷாந்த் மிகவும் கடினமான சூழலில் தான் இருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அது ரகசியமல்ல. தொழில்துறையில் யாரும் அவருக்கு ஆதரவாக நிற்கவில்லை. அவர்கள் உதவி கரம் கொடுக்கவில்லை. இன்றைய டுவிட்கள் இந்த துறை எவ்வளவு மேம்போக்கானது என்பதற்கு சாட்சி. இங்கே யாரும் உங்கள் நண்பர் இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.
நடிகையுடன் நெருக்கம்?
சுஷாந்த் சிங் மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பீகாரில் உள்ள அவரது உறவினர் ஒருவர் கூறுகையில், ‘இந்த ஆண்டு நவம்பரில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தார். தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில், சுஷாந்த் சிங் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தெரிவித்தார். அப்போது, வருங்கால மனைவி குறித்து அவர் பெயரை வெளிப்படுத்தவில்லை. அவரது குடும்பம் திருமண ஏற்பாடுகளை செய்து வந்தது. விரைவில் மும்பைக்குச் செல்லவும் அவர்கள் திட்டமிட்டனர். நடிகை ஒருவருடன் சுஷாந்த் நெருங்கி பழகியதாக கூறினாலும், இருவரும் நல்ல நண்பர்கள்’ என்றனர்.