தண்டையார்பேட்டை, ராயபுரத்தில் ஒரே நாளில் 301 பேருக்கு கொரோனா
6/7/2025 2:30:49 PM
தண்டையார்பேட்டை: சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வடசென்னை பகுதிகளில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தண்டையார்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட கொடுங்கையூர் வெங்கடேஷ்வரா காலனி, முத்தமிழ்நகர், கண்ணதாசன் நகர், கிருஷ்ணமூர்த்திநகர், வியாசர்பாடி எஸ்எம்நகர், கொருக்குப்பேட்டை மீனாம்பாள்நகர், தண்டையார்பேட்டை நேதாஜிநகர், கருணாநிதிநகர், வஉசிநகர், புதுவண்ணாரப்பேட்டை செரியன்நகர், காசிமேடு பல்லவன்நகர், வண்ணாரப்பேட்டை மேயர் பாசுதேவ்தெரு, ஆரணி ரங்கன்தெரு உள்ளிட்ட பகுதிகளில் இன்று ஒரே நாளில் 163 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுபோல் ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட வண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி தெரு, ராயபுரம் மாதா கோயில்தெரு, மண்ணடி, முத்தியால்பேட்டை, ஏழுகிணறு, கொண்டித்தோப்பு, கொத்தவால்சாவடி, பாரிமுனை, சிந்தாரிப்பேட்டை, புதுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இன்று ஒரே நாளில் 138 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் ஓமந்தூரார், ராஜிவ்காந்தி, ஸ்டான்லி ஆகிய அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் சீல் வைக்கப்பட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அவர்களின் உறவினர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேற்கண்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.