ஆதம்பாக்கத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது
6/5/2025 2:49:28 PM
ஆலந்தூர்: ஆதம்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை ஆதம்பாக்கம், ராமகிருஷ்ணாபுரம் 3-வது தெருவில் எந்நேரமும் ஒரு கும்பல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக ஆதம்பாக்கம் போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்தன. இதையடுத்து நேற்று மாலை அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டின் முன்பு 2 வாலிபர்கள் வீட்டுவாசலில் நின்றபடி கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து வருவது தெரியவந்தது.
அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்கு வைத்திருப்பது தெரியவந்தது. பின்னர் இருவரையும் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், இருவரும் அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் (34), லட்சுமணன் (19) எனத் தெரியவந்தது. இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.