சென்னையில் இருந்து இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களில் இன்று பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: கட்டண அதிகரிப்பால் அதிருப்தி
6/1/2025 3:40:10 PM
மீனம்பாக்கம்: சென்னையில் இருந்து இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களில் இன்று பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கட்டணம் அதிகரித்துள்ளதால் பயணிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் சில தளர்வுக்கு பிறகு, உள்நாட்டு விமான சேவை தொடங்கியுள்ளது. சென்னையில் இருந்து இன்று 48 விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதில் டெல்லி, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூர், திருவனந்தபுரம், விஜயவாடா, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட 24 விமானங்களில் 3,100 பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.
அதேபோல வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வரும் 24 விமானங்களில் 1,100 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகள் பயணிக்கின்றனர். கடந்த ஒரு வாரத்தில் இன்றுதான் அதிகளவிலான பயணிகள் பயணம் செய்கின்றனர். ஆனாலும் வெளிமாநிலம், மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து குறைவாக உள்ளது. இதற்கு காரணம், இ-பாஸ் கட்டாயம், 14 நாட்கள் தனிமைப்படுத்துதல், கைகளில் முத்திரை குத்துவது மற்றும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவது போன்றவைதான்.
மேலும், கட்டணம் அதிகளவில் இருப்பதும் காரணமாகும். சென்னை- கொல்கத்தா குறைந்த கட்டணம் ரூ.6,500 என்று இணையத்தில் காட்டுகிறது. முன்பதிவு செய்யும்போது அந்த கட்டண டிக்கெட் இல்லை. ரூ.15,500 டிக்கெட்தான் இணையத்தில் வருகிறது. அதுவும் ஓரிருவருக்கு மட்டுமே கிடைக்கிறது. இதையடுத்து, ரூ.29,500 டிக்கெட்தான் உள்ளது என்று கூறி, அதிக கட்டண டிக்கெட் வாங்க கட்டாயப்படுத்ததுகின்றனர். அதேபோல் டெல்லி, அந்தமான், மதுரை, கோவை, தூத்துக்குடி உள்ளிட்ட பல இடங்களுக்கும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் பயணம் செய்ய தயங்குகின்றனர்.
ஆனால் சென்னையில் இருந்து செல்பவர்கள், எவ்வளவு பணம் என்றாலும் டிக்கெட் எடுத்து சொந்த ஊர் திரும்புகின்றனர். எனவே தான் சென்னையில் இருந்து அதிகளவில் பயணிகள் செல்வதும், வருகையில் குறைவாக இருப்பதாகவும்
கூறப்படுகிறது.