கர்ப்பமான கல்லூரி மாணவிக்கு உதை: காதலனிடம் போலீஸ் விசாரணை
3/19/2020 3:37:51 PM
சென்னை: கர்ப்பமான கல்லூரி மாணவியை அடித்து உதைத்த காதலனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மயிலாப்பூர் நொச்சி குப்பத்தை சேர்ந்தவர் ராணி (18 - பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் வீட்டின் அருகே உள்ள ஜெயச்சந்திரன் (25) என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் பல இடங்களுக்கு சென்றுள்ளனர். அப்போது காதலி ராணியை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஜெயச்சந்திரன் காதலியுடன் பல முறை நெருக்கமாக இருந்து வந்துள்ளார். இதனால் ராணி தற்போது கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் ராணியின் தந்தைக்கு தெரியவந்தது.
அதிர்ச்சியடைந்த அவரது தந்தை மகளை கர்ப்பமாக்கிய ஜெயச்சந்திரன் வீட்டிற்கு சென்று திருமணம் செய்ய பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். இந்நிலையில் காதலன் ஜெயச்சந்திரன் தனது காதலியை வீட்டிற்கு அழைத்து சென்று சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது. இதில் காதலியின் பல் உடைந்து ரத்த கொட்டியது. இதையடுத்து அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சம்பவம் குறித்து ராணி மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் படி காதலன் ஜெயச்சந்திரனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.