‘வேலைக்கு ஏற்பாடு செய்ததற்கு கிடைத்த கைமாறு’பணம் கேட்டு கடத்தப்பட்ட சிறுவன் நெல்லூரில் மீட்பு: உ.பி. வாலிபர் கைது; ஆவடியில் பரபரப்பு
3/18/2020 3:19:07 PM
ஆவடி: பணம் கேட்டு கடத்தப்பட்ட சிறுவன் நெல்லூரில் மீட்கப்பட்டான். இது தொடர்பாக உ.பி. வாலிபரை போலீசார் கைது செய்தனர். வேலை இல்லாமல் இருந்தவரை அழைத்து வந்து வேலைக்கு ஏற்பாடு செய்ததற்கு கிடைத்த கைமாறு என சிறுவனின் தந்தை நொந்து கொண்டார். ஆவடி சேக்காடு அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ராதேஷ் ஷியாம் (28). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி ராக்கி (23). இவர்களது மகன் ஆந்தேஷ் (2). ெசாந்த ஊர் மத்திய பிரதேசம். ராதேஷ் ஷியாமின் உறவினர் உத்தரபிரதேசத்தை சேர்ந்த சன்னி (24). இவர் வேலை இல்லாமல் இருந்ததால், சென்னை வரவழைத்தார் ராதேஷ் ஷியாம். பின்னர் தனது வீட்டிலேயே தங்க வைத்து வேலையும் வாங்கி கொடுத்தார். சன்னி, கட்டிட வேலைக்கு சென்று வருகிறார்.
இந்நிலையில், நேற்று மதியம் ஆந்தேஷை கடைக்கு அழைத்து சென்றார் சன்னி. வெகு நேரமாகியும் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ராதேஷ் ஷியாம், கடைக்கு சென்று தேடினார். அக்கம் பக்கத்தில் விசாரித்தார். எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதிர்ச்சியடைந்தார். சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு, ராதேஷ் சியாமுக்கு போன் அழைப்பு வந்தது. அதில், பேசிய சன்னி, ‘எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது. அதனால் உனது மகனை கடத்தி வைத்துள்ளேன். எனக்கு தேவையான பணத்தை கொடுத்தால் உனது மகனை விட்டு விடுகிறேன். இல்லாவிட்டால் கொன்று விடுவேன்’ என்று மிரட்டியுள்ளார்.
இதை கேட்டதும் ராதேஷ் ஷியாம் செய்வதறியாது திகைத்தார். பின்னர், ஆவடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் காளிராஜ் தலைமையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
மிரட்டல் விடுத்த செல்போன் நம்பரை ஆய்வு செய்தனர். ஆந்திரா மாநிலம் நெல்லூரில் இருப்பது தெரிந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார், நெல்லூருக்கு விரைந்து சென்று, சன்னி தங்கியிருந்த லாட்ஜை சுற்றி வளைத்தனர். தப்பி ஓட முயன்ற அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ஆந்தேஷை மீட்டனர். பின்னர் சன்னியை இன்று அதிகாலை சென்னைக்கு அழைத்து வந்தனர். ஆந்தேஷ், அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான். கண்ணீர் மல்க குழந்தையை கட்டிதழுவினர். கைதான சன்னியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.