கொரோனா பீதி: சர்வதேச டென்னிஸ் போட்டிகள் அடுத்தடுத்து ரத்து
3/12/2025 3:34:10 PM
லண்டன்: கொரோனா வைரஸ் பீதியால் சர்வதேச டென்னிஸ் போட்டிகள் அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரானோ வைரஸ் தாக்குதலால் இதுவரை பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,600 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால் பொது இடங்களில் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூட வேண்டாம் என்று பல நாடுகள் கேட்டுக் கொண்டுள்ளளன. இதையடுத்து சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகள் பல தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டு வரும் நிலையில் இந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்தக் கூடாது என ஒரு சாரார் கூறி வருகின்றனர். இத்தாலியில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால், மிலான் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டிகளை ரத்து செய்து, அந்நாட்டு டென்னிஸ் கழகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இண்டியன்வெல்சில் நடைபெற இருந்த பிஎன்பி பாரிபாஸ் ஓபன் மற்றும் புடாபெஸ்டில் நடைபெற இருந்த ஃபெட் கோப்பை டென்னிஸ் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் ஏடிபி மற்றும் டபிள்யூடிஏ போட்டிகள் சிலவற்றை 6 மாத காலத்திற்கு பின்னர் நடத்திக் கொள்ளலாம் என பல நாடுகளை சேர்ந்த டென்னிஸ் சங்கங்களின் நிர்வாகிகள் கூட்டாக முடிவு செய்துள்ளனர். இருப்பினும் பிரான்சின் பாரிசில் பிரெஞ்ச் ஓபன், கிராண்ட்ஸ்லாம் வழக்கம் போல் நடைபெறும் என பிரான்ஸ் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறுகையில், ‘மே மாதம் 2ம் வாரத்தில் பிரெஞ்ச் ஓபன் ஆடவர் மற்றும் ஒற்றையர் கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் துவங்க உள்ளன. அதற்குள் நிலைமை சீராகி விடும் என நம்புவோம்’ என்று தெரிவித்துள்ளனர்.