காஞ்சிபுரம் சரவண பவன் உணவக மேலாளர் தற்கொலை: சம்பள பிரச்னையா? விசாரணை
2/27/2020 3:47:58 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சரவண பவன் உணவகத்தில் மேலாளர் தற்கொலை செய்து கொண்டார். சம்பள பிரச்சனை காரணமாக இந்த சம்பவம் நடந்ததா என போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் பழனியப்பன் (49). காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள சரவணபவன் ஓட்டல் கிளையின் மேலாளராக வேலை பார்த்து வந்தார். இது தவிர, காஞ்சிபுரம் நெல்லுக்கார தெரு, வெள்ைளக்கேட் பகுதியில் உள்ள சரவணபவன் கிளைகளுக்கும் மேலாளராக இருந்து வந்தார். காஞ்சிபுரத்தில், சரவணபவன் ஓட்டல் நிர்வாகம் வழங்கிய வீட்டில் மனைவி, மகன், மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், பழனியப்பனின் மகன் படித்து விட்டு வேலை இல்லாமல் இருந்து வருகிறார். மகளுக்கு திருமணமாகவில்லை.
இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்து வந்தார் பழனியப்பன். மேலும் உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுபற்றி, பழனியப்பனிடம் ஊழியர்கள் கேட்டுள்ளனர். அதற்கு அவர், நிர்வாகத்துக்கு தெரிவித்தார். அதற்கு பிறகும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது பற்றி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல், உணவக ஊழியர்கள் 50 பேருக்கு முன்பணமாக தலா ரூ.5 ஆயிரம் வீதம் வழங்கினார் பழனியப்பன். இது பற்றி நிர்வாகத்துக்கு தெரியவர, பழனியப்பனை கண்டித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த பழனியப்பன், நேற்றிரவு வழக்கம் போல வேலை முடிந்ததும் வீட்டுக்கு சென்றார். மனைவி, மகன், மகள் தூங்கி விட்டனர்.
மனம் உடைந்த பழனியப்பன், விரக்தியின் உச்சத்துக்கே சென்றார். வீட்டின் தனி அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் மனைவி, மகன், மகள் மற்றும் உறவினர்கள் கண்விழித்து பார்த்தபோது, உடலை கண்டு கதறி அழுதனர். தகவல் அறிந்து விஷ்ணு காஞ்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் பழனியப்பன் எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை கைப்பற்றினர். பின்னர் வழக்கு பதிந்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் ஓட்டல் ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.