பொள்ளாச்சி அருகே கூட்டுறவு வங்கி லாக்கரை உடைக்க முடியாததால் 100 பவுன் தப்பியது: ஜன்னல் கம்பியை வளைத்து புகுந்தனர்
2/27/2020 3:29:24 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே கூட்டுறவு வங்கியின் லாக்கரை உடைக்கமுடியாததால் 100 பவுன் நகை, 5 லட்சம் தப்பியது. பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை அருகே உள்ள மாரப்பகவுண்டன்புதூர் கிராமத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் செயல்படுகிறது. நேற்று முன்தினம் வேலை முடிந்ததும் அலுவலர்கள் சென்றனர். காவலாளி காளியப்பன் பணியில் இருந்தார். இந்த நிலையில், நள்ளிரவில் வங்கிக்கு வந்த மர்ம நபர்கள், வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலக கட்டிடத்தின் பின் பகுதி ஜன்னல் கம்பிகளை நெம்பி உள்ளே சென்றுள்ளனர். பின்னர் வங்கி லாக்கரை உடைத்தபோது முடியாமல் திருடர்கள் வெளியேறிவிட்டனர்.
நேற்று காலை பணிக்கு வந்த ஊழியர்கள், இரும்பு லாக்கரில் வெல்டிங் கட்டரால் உடைப்பதற்கு முயற்சித்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். வேளாண் கூட்டுறவு கடன் சங்க செயல் அலுவலர் சர்மிளாபானு கொடுத்த தகவல் அடிப்படையில், ஆனைமலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். கொள்ளை முயற்சி நடந்தது தெரிய வந்தது. லாக்கரில் சுமார் 100 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் இருந்துள்ளது. கொள்ளையர் முயற்சி தோல்வி அடைந்ததால் அந்த நகை, பணம் தப்பியது.
மாரப்பகவுண்டன்புதூர் துவக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தை சுற்றிலும் மின் விளக்கு வசதி போதியளவு இல்லை. கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாமல் உள்ளது. இதனால், கொள்ளையர்கள் உள்ளே புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதித்து, வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.