காங்கேயம் பகுதியில் பூஞ்சானம் பிடித்து கெட்டுப்போன ஆவின் கலப்பு தீவனம் விற்பனை: மாடுகளுக்கு நோய் தாக்கும் ஆபத்து
2/27/2020 3:18:29 PM
காங்கேயம்: காங்கேயம் பகுதியில் சுமார் 100 பால் உற்பத்தியாளர்கள், கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள கறவை மாடுகள் வளர்ப்போர் தாங்கள் உற்பத்தி செய்யும் பாலை இந்த சங்கங்களுக்கு சப்ளை செய்து வருகின்றனர். இந்த சங்கங்கள் ஆவின் கலப்பு தீவனத்தை பால் உற்பத்தியாளர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். ஈரோடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் மூலம் இந்த பகுதிகளுக்கு கலப்பு தீவனம் சப்ளை செய்யப்படுகிறது. காங்கேயம் அடுத்துள்ள மரவபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் வழங்கப்பட்டு வரும் கலப்பு தீவன மூட்டைகளில் பல மூட்டைகளில் அடைக்கப்பட்டுள்ள கலப்பு தீவனம் பூஞ்சானம் பிடித்து கெட்டுபோயுள்ளதாக பால் உற்பத்தியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து பால் உற்பத்தியாளர்கள் கூறியதாவது: தற்போது எங்களுக்கு வழங்கப்பட்ட ஆவின் கலப்பு தீவன மூட்டைகளில் பல மூட்டைகளில் தீவனம் பூஞ்சானம் பிடித்து கெட்டுப்போயுள்ளது. இந்த தீவனத்தை மாடுகளுக்கு கொடுத்தால் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுபற்றி ஆவின் நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டால் அடுத்த லாட் வரும்போது கெட்டுப்போன தீவன மூட்டைகளை திரும்ப பெற்றுக்கொண்டு அதற்கு பதிலாக வேறு மூட்டைகளை தருவதாக கூறுகின்றனர். அடுத்த லாட் வர மாதக்கணக்கில் ஆகும் என்பதால் அதுவரை கலப்பு தீவனத்திற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. எனவே கெட்டுப்போன கலப்பு தீவன மூட்டைகள் வழங்கப்பட்ட சங்கங்களில் இருந்து உடனடியாக பெற்றுக்கொண்டு மாற்று மூட்டைகளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த 2 ஆண்டுக்கு முன்புவரை கலப்பு தீவனங்கள் சணல் சாக்குகளில் வழங்கப்பட்டு வந்தது. சணல் சாக்குகளைப் பொறுத்தவரை கலப்பு தீவனத்தில் ஈரப்பதம் இருந்தால் அந்த ஈரப்பதத்தை ஈர்த்துக்கொள்ளும் தன்மை சணல் சாக்குகளுக்கு உண்டு. அதனால் தீவனம் கெட்டுப்போகாமல் இருந்தது. தற்போது பாலித்தீன் சாக்குகளில் தீவனத்தை அடைத்து கொடுப்பதால் தீவனத்தில் ஈரப்பதம் இருந்தால் சில நாட்களிலேயே காற்றோட்டம் இல்லாத நிலையில் அவை கெட்டுப்போய் விடுகிறது. தற்போது வழங்கப்பட்ட தீவனம் கூட இந்த காரணத்தினால்தான் கெட்டுப்போயிருக்கும் என கருதுகிறோம். எனவே வரும் காலங்களில் சணல் சாக்குகளில் மட்டுமே கலப்பு தீவனத்தை வழங்க ஆவின் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.