துபாய், மலேசியா, இலங்கையில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த 18 பேரிடம் ரூ5.5 கோடி தங்கம் பறிமுதல்: அதிகாரிகளை தாக்கி 4 கடத்தல் காரர்களை மீட்டு சென்ற கும்பலுக்கு வலைவீச்சு
2/20/2020 3:18:27 PM
மீனம்பாக்கம்: துபாய், மலேசியா, இலங்கையில் இருந்து கடத்தி வந்த 18 பேரிடம் ரூ.5.5 கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த 18 பேரையும் விசாரணைக்காக வேனில் அழைத்து சென்ற சுங்க அதிகாரிகளை சரமாரியாக தாக்கி 4 பேரை 30 பேர் கும்பல் மீட்டு சென்றது. சென்னை விமான நிலையத்தில் நள்ளிரவில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலையத்தில், சுங்கத்துறை அதிகாரிகள் துணையுடன் கடத்தல் தங்கம் வெளியில் எடுத்து வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து 12 பேர் கொண்ட மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று காலையில் வந்தனர். சுங்கச்சோதனையை முடித்து விட்டு பயணிகள் வெளியே வரும் போர்ட்டிகோ பகுதியில் சாதாரண உடையில் நின்று கண்காணித்து கொண்டிருந்தனர்.
அப்போது, துபாய், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து வந்த பயணிகளில் சந்தேகத்துக்கு இடமானவர்களை நிறுத்தி சோதனையிட தயாரானார்கள். அதற்கு அவர்கள், ‘நாங்கள் ஏற்கனவே சோதனையை முடித்து விட்டுதான் வந்துள்ளோம். நீங்கள் யார், எப்படி எங்களிடம் சோதனை நடத்தலாம்’ என்று வாக்குவாதம் செய்தனர். உடனே அவர்கள், ‘நாங்கள், மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள்’ என்று கூறி, அவர்களது உடமைகளை சோதனையிட்டனர். இதில் சிலர், தங்கக்கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். மொத்தம் 18 பயணிகளை சந்தேகத்தின்பேரில், மீண்டும் உள்ளே அழைத்து சென்று தனி அறையில் சோதனையிட்டனர். அவர்களிடம் இருந்து, 12.6 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். சர்வதேச மதிப்பு ரூ.5.5 கோடி. 18 பேரையும் கைது செய்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர்கள், அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சென்று தங்கத்தை கடத்தி வருபவர்கள் என்றும், கடத்தல் கும்பலுக்கு கூலியாக செயல்படுபவர்கள்.
சுங்கத்துறை அதிகாரிகள் சிலரது ஆதரவுடன் இந்த கடத்தல் நடந்துள்ளது’ என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, 5 சுங்க அதிகாரிகளை பிடித்து நேற்று நண்பகல் முதல் நள்ளிரவு வரை விசாரித்தனர். அவர்களில் அகமதாபாத்தை சேர்ந்த விகாஸ், கேரளாவை சேர்ந்த இ.வி.ராஜன் ஆகியோர், கடத்தல் ஆசாமிகளுக்கு மிக நெருக்கமானவர்கள். சுங்கச்சோதனை நடத்தாமலேயே கடத்தல்காரர்களை வெளியே அனுப்பியதும் தெரிந்தது. இதையடுத்து அவர்களை விசாரணைக்காக தி.நகரில் உள்ள அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். மேலும், வேறு அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளார்களா என்றும் விசாரிக்கின்றனர். இதற்கிடையில், கைதான 18 பேரையும் வேனில் ஏற்றி நள்ளிரவு 12.30 மணிக்கு தி.நகரில் உள்ள அலுவலகத்துக்கு கொண்டு செல்ல தயாரானார்கள். அந்த நேரத்தில் திடீரென 30க்கும் மேற்பட்டோர், வேனை வழிமறித்தனர். அப்போது அவர்கள், ‘எங்களை கடத்தலுக்கு பயன்படுத்தியவர்களே சுங்க அதிகாரிகள்தான்.
அவர்களை விட்டு, இவர்களை எப்படி கைது செய்யலாம்’ என்று கூறியபடி, திடீரென வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளை தாக்கினர். அதோடு, 18 பேரில் 4 பேரை வேனில் இருந்து இறக்கி அழைத்து சென்றனர். மீதமுள்ளவர்களுடன் வேன் புறப்பட்டு சென்றது. இச்சம்பவம் தொடர்பாக வருவாய் துறை அதிகாரி பிரிதிவிராஜ், சென்னை விமான நிலைய போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து, அந்த கும்பலை தேடி வருகின்றனர். மேலும் சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.