ரூ.77 கோடி சிக்கிய விவகாரம்: அன்புசெழியனின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவு...பெரிய ‘தலைகள்’ சிக்குகின்றனர்?
2/9/2025 2:27:33 PM
சென்னை: சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் இருந்து ரூ.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அவரது வங்கி கணக்குகளை ஆய்வு செய்ய வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர். அவர் எத்தனை வங்கிகளில் கணக்கு வைத்துள்ளார் என்பதையும், அவரது நிறுவனத்தின் பெயரில் உள்ள வங்கி கணக்குகளின் விபரங்களையும் வருமான வரித்துறையினர் சேகரித்துள்ளனர்.நடிகர் விஜய் நடித்து, கடந்த ஆண்டு வெளியான `பிகில்’ திரைப்படம் தமிழகம் மட்டுமல்லாது திரையிடப்பட்ட அனைத்து இடங்களிலும் வெற்றிகரமாக ஓடி அதிகளவில் பணம் வசூலானது. ஆனால் இந்த படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம், நடிகர் விஜய், விநியோகஸ்தர் சுந்தர் மற்றும் சினிமா பைனான்சியரும் அதிமுக பிரமுகருமான அன்புசெழியன் தரப்பினர் வருமான வரித்துறைக்கு சரியான கணக்கு காட்டவில்லை என்று புகார் வந்தது.
இதையடுத்து, இந்த முறைகேடு தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 5ம் தேதி காலை சோதனை மற்றும் விசாரணையை துவக்கினர். அன்று காலை நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த விஜய்யிடம் நேரடியாக விசாரணை நடத்தினர். பின்னர் அவரை சென்னை அழைத்து வந்தனர். இந்த விசாரணை நேற்று முன்தினம் மாலை வரை தொடர்ச்சியாக சுமார் 30 மணி நேரம் நடைபெற்றது. இதே போல் பைனான்சியர் அன்புசெழியனுக்கு சொந்தமாக மதுரை மற்றும் சென்னையில் உள்ள வீடுகளிலும், அவரது நிறுவனங்களிலும் கடந்த 3 நாட்களாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.77 கோடி ரொக்கம், 2 பைகள் நிறைய தங்க, வைர நகைகள் மற்றும் ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துக்கள், வெளிநாட்டில் முதலீடு செய்ததற்கான ஆவணங்களையும் வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். அதை மதிப்பீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
விசாரணைக்கு ஆஜராகுமாறு, வருமான வரித்துறை அதிகாரிகள் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளோம். ஆனால் இதுவரை அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அன்புசெழியனிடம் கடந்த 2016ம் ஆண்டு முதல் இதுவரை 3 முறை வருமான வரித்துறை சோதனை நடந்துள்ளது. இப்போதுதான் அதிகளவில் பணம் சிக்கியுள்ளது. ஆனால் ஒருமுறை கூட அவர் நேரில் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அன்புசெழியனுக்கு, தமிழக அமைச்சர்களிடம் அதிக செல்வாக்கு உள்ளது என்று கூறப்படுகிறது. தென்மாவட்டத்தை சேர்ந்த மூத்த அமைச்சர்கள் 2 பேரின் பினாமியாக செயல்படுவதுடன், அவர்களின் பணத்தை வைத்துக் கொண்டுதான் அன்புசெழியன் தமிழ் சினிமா துறையில் முதலீடு செய்து, அதிக வட்டி வசூலித்து வருகிறார். இவர் மீது ஒவ்வொரு முறை குற்றச்சாட்டு வரும் போதும் அமைச்சர்கள் தலையிட்டு அவரை கைது செய்ய விடாமல் தடுத்து விடுகிறார்கள்.
டைரக்டர் மணிரத்னத்தின் சொந்த அண்ணன் ஜி.வெங்கடேஸ்வரன் தற்கொலைக்கு அன்புசெழியன்தான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோன்று நடிகரும், தயாரிப்பாளருமான நடிகர் சசிகுமாரின் நெருங்கிய உறவினர் நண்பர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். இதற்கும் அன்புசெழியன்தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்திருந்தார். அப்படி இருந்தும் போலீசாரால் அன்புசெழியனை கைது செய்ய முடியவில்லை. தற்போது நடந்துள்ள ரெய்டுகளின் மூலம் அன்புச்செழியன் ரூ.300 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இதுதவிர வெளிநாடுகளிலும் அதிக தொகையை அவர் முதலீடு செய்துள்ளார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்நிய செலாவணி மோசடி குற்றச்சாட்டும் அவர் மீது எழுந்துள்ளதால் அமலாக்க துறையும் அன்புசெழியனுக்கு நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டுள்ளது.
இதில் திருப்பமாக ரூ.165 கோடிக்கு நடந்த மோசடியை அன்புச்செழியன் ஒப்புக் கொண்டுள்ளார் என்றும், அதற்கான அபராதத்தை கட்ட தயார் என்று தெரிவித்துள்ளார் என்றும் தற்போது செய்திகள் வந்துள்ளன. அன்புச்செழியனின் வீட்டில் ரொக்கமாக ரூ.77 கோடி கைப்பற்றப்பட்டுள்ளதையடுத்து, அவரது வங்கி கணக்குகளை ஆய்வு செய்ய வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அவர் எந்தெந்த வங்கிகளில் யார் யார் பெயர்களில் கணக்குகள் வைத்துள்ளார் என்ற விபரங்களை அதிகாரிகள் தற்போது சேகரித்துள்ளனர். இதில் அவரது பெயரில் மட்டும் மதுரை மற்றும் சென்னையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும், தனியார் வங்கிகளிலும் 7 வங்கி கணக்குகள் உள்ளன. முதல் கட்டமாக இந்த கணக்குகளின் மூலம் நடந்த பரிவர்த்தனைகளை வருமான வரித்துறையினர் ஆய்வு செய்ய உள்ளனர். இதில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என்றும், பெரிய தலைகள் பலர் சிக்குவார்கள் என்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.