ரூ.60 லட்சம் தராவிட்டால் வெடிகுண்டு வீசி கொல்வோம்: அதிமுக மாஜி சேர்மனுக்கு மிரட்டல்
2/6/2025 3:45:33 PM
காலாப்பட்டு: ரூ.60 லட்சம் தராவிட்டால் வெடிகுண்டு வீசி கொலை செய்வோம் என அதிமுக முன்னாள் சேர்மனுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். புதுவை அடுத்த கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையை சேர்ந்தவர் அப்துல் ஹமீது (65). அதிமுக பிரமுகரான இவர் கோட்டக்குப்பம் பேரூராட்சியில் 2 முறை சேர்மனாக இருந்துள்ளார். இவருக்கு வீட்டின் அருகில் சொந்தமான கடையும் உள்ளது. இதில் ஒருவர் வாடகை அடிப்படையில் துணிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை அந்த கடைக்கு வந்த மர்ம நபர் ஒருவர், கடை உரிமையாளரிடம் நீங்கள் யாரிடம் வாடகை தருகிறீர்கள்? என கேட்டுள்ளார்.
அதற்கு அந்த கடைக்காரர், முன்னாள் சேர்மன் அப்துல் ஹமீதுவின் மருமகனிடம் கொடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அந்த நபர், நாளை கடையை திறக்கக்கூடாது. மீறி திறந்தால் கடையில் வெடிகுண்டு வீசுவோம் என மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இதையடுத்து முன்னாள் சேர்மன் அப்துல் ஹமீதுவுக்கு மர்ம நபர் ஒருவர் செல்போனில் தொடர்புகொண்டு, நீ உடனே ரூ.60 லட்சம் தர வேண்டும். தர மறுத்தால் உன்னை வெடிகுண்டு வீசி கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார். பின்னர் சிறிது நேரம் கழித்து வில்லியனூர் சுல்தான்பேட்டையை சேர்ந்தவரும், தற்போது பிரான்சில் வசித்து வருபவருமான அன்சாரி என்பவர் அப்துல் ஹமீதுவிடம் செல்போனில் தொடர்பு கொண்டு, உன்னிடம் போனில் கேட்டபடி ரூ.60 லட்சத்தை கொடுத்துவிடு.
தேவையில்லாமல் போலீஸ், கோர்ட், பஞ்சாயத்து என போனால் வெடிகுண்டு வீசி உன்னை கொன்றுவிடுவேன் என மிரட்டல் விடுத்தார்.இதையடுத்து கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் இதுறித்து அப்துல் ஹமீது புகார் அளித்தார். அப்போதும், மர்ம நபர் அப்துல் ஹமீதுவுக்கு மீண்டும் செல்போனில் மிரட்டல் விடுத்தார். அப்போது, தேவையில்லாமல் பிரச்னை செய்யாதே. கேட்ட பணத்தை தரவில்லையென்றால் இரவில் நீ எங்கு படுத்திருந்தாலும் வெடிகுண்டு வீசி கொலை செய்துவிடுவோம் என்று கூறியுள்ளார். இதையடுத்து சுல்தான்பேட்டை அன்சாரி மற்றும் மர்ம நபர் செல்போனில் பேசிய ஆடியோவையும், கடையில் நேரில் வந்து மிரட்டல் விடுத்தது தொடர்பான சிசிடிவி காட்சி பதிவுகளையும் அப்துல் ஹமீது போலீசில் ஒப்படைத்தார். அதன்பேரில் கோட்டக்குப்பம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.