வியாபாரி, அதிகாரி, டாக்டர் வீடுகளில் 100 பவுன் நகைகள் கொள்ளை
2/6/2025 3:28:16 PM
கரூர்: கரூர் மற்றும் சேலத்தில் 100 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.கரூர் கோவை ரோடு வடிவேல் நகரை சேர்ந்தவர் சுரேஷ்(38), இவர் கரூரில் விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். சுரேசுக்கு உதவியாக அவரது மனைவி மதுமிதாவும் கடைக்கு வந்து வியாபாரத்தை கவனிப்பார். நேற்று காலை சுரேஷும், மதுமிதாவும் கடைக்கு ெசன்றுவிட்டனர். வீட்டில் வயதான சுரேஷின் தாயார் மட்டும் இருந்தார். அவர் நேற்று மாலை 5 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டு 6 மணி அளவில் வீட்டுக்கு திரும்பினார்.
அப்போது வீட்டின் பூட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தார் பீரோவும் உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த நகைகளை காணவில்லை. பீரோவில் இருந்த 49 பவுன் தங்க நகைகள், 5பவுன் வைர நெக்லஸ் கொள்ளை போய் இருந்தது. தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வழக்கு பதிந்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
சேலம்
சேலம் சூரமங்கலம் முல்லை நகரை சேர்ந்தவர் பசுபதி (57). இவர் சேலம் ரயில் நிலையத்தில் டிக்கெட் புக்கிங் முதன்மை கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கனகராணி. இவர்களது மகள் கார்த்திகாவுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, வரும் 26ம் தேதி திருமணம் நடக்கிறது. இதற்காக பசுபதி உறவினர்களுக்கு பத்திரிக்கை கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். கடந்த 4ம் தேதி பசுபதி வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள உறவினர்களுக்கு மகளின் திருமண அழைப்பிதழை கொடுக்க மனைவி, மகளுடன் சென்றார். அங்கு திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கு கொடுத்து விட்டு இன்று காலை சேலத்துக்கு வந்தனர்.
வீட்டிற்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்திருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கு பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவை உடைத்து 43 பவுன் நகை, ₹ 20 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
மற்றொரு சம்பவம்
சேலம் குரங்குசாவடி பெருமாள் மலை அடிவார பகுதியை சேர்ந்தவர் டாக்டர் வெங்கடேசன். இவர் குடும்பத்துடன் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு கொளத்தூரில் உள்ள உறவினர் திருமணத்துக்கு சென்று விட்டு நேற்று வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 7 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்தும் சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.