திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் ரூ.8 லட்சம் வைர கற்களுடன் ஆசாமி கைது
2/6/2025 3:24:12 PM
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் ரூ.8 லட்சம் வைர கற்களுடன் நின்ற ராஜஸ்தான் ஆசாமியை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் திருவனந்தபுரம் தம்பானூர் ரயில் நிலையத்தில் நேற்று ஒருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தார். உடனே ரயில்வே போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த சந்தம் சந்த் (52) என்பது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து அவரை சோதித்து பார்த்தனர். அப்போது அவரிடம் வைரம், பவளம், கோமேதகம் உள்ளிட்ட விலை உயர்ந்த கற்கள் இருந்தன. அதன் மதிப்பு ரூ.8 லட்சம் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில், ராஜஸ்தானில் இருந்து திருவனந்தபுரம் கொண்டு வந்து வெளிநாட்டுக்கு வைரக்கற்களை கடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.