வேலை வாங்கி தருவதாக ரூ.95 லட்சம் மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சீல் வைக்கப்பட்ட வீட்டில் சோதனை
2/6/2025 3:07:51 PM
சென்னை: போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.95 லட்சம் மோசடி செய்த வழக்கு தொடர்பாக சீல் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2011ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தார். அப்போது போக்குவரத்து துறையில் நடத்துனர், ஓட்டுநர், தொழில்நுட்ப ஊழியர்கள் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பணி அமர்த்தப்பட்டனர். அப்போது, 16 பேரிடம் தமிழக போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.95 லட்சம் பணம் வாங்கி கொண்டு வேலை வாங்கி தராமல் மோசடி செய்ததாக சென்னை அம்பத்தூரை சேர்ந்த கணேஷ்குமார் என்பவர் கடந்த 2017ம் ஆண்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செந்தில் பாலாஜிமீது பரபரப்பு புகார் அளித்தார்.
இந்த புகாரின் படி, மத்திய குற்றப்பிரிவு போலீசார், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 3 பேர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் செந்தில் பாலாஜியை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனை அறிந்த செந்தில் பாலாஜி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து முன்ஜாமீன் பெற்றார். இதற்காக மத்திய குற்றப்பிரிவு போலீசார் மெட்ரோ பாலிட்டன் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடுகளில் வழக்கு தொடர்பாக சோதனை நடத்த அனுமதி வேண்டும் என்று மனுதாக்கல் செய்து அதற்கான அனுமதியை பெற்றனர். அதைதொடர்ந்து அரவக்குறிச்சி எம்எல்ஏவாக உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான சென்னை மந்தைவெளி திருவேங்கடம் தெரு விரிவாக்கம் பகுதியில் உள்ள வீடு, கரூர் அடுத்த ராமேஸ்வரப்பட்டியில் உள்ள பூர்வீக வீடுகள் மற்றும் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அவரது சகோதரர் அசோக் வீடு மற்றும் அவரது டெக்ஸ்டைல் நிறுவனம் என 17 இடங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 31ம் தேதி அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் மடி கணினி, பென்டிரைவ், மெமரிக்கார்டு என முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை மந்தைவெளியில் உள்ள வீடு பூட்டப்பட்டிருந்ததால் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் சரவணகுமார் தலைமையிலான 4 போலீசார் பூட்டிய வீட்டிற்கு சீல் வைத்தனர். இந்நிலையில் சீல் வைக்கப்பட்ட சென்னை வீட்டில் சோதனை நடத்த நீதிமன்றத்தில் அனுமதி பெற்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று மந்தைவெளி திருவேங்கடம் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் காலை 10 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் வழக்கிற்கான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.