சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் ஆளுநர் மீது வழக்கு: உத்தரபிரதேச போலீஸ் நடவடிக்கை
2/4/2025 4:36:41 PM
லக்னோ: சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் கவர்னர் மீது உத்தரபிரதேச போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்களின் பதிவுக்கு (என்ஆர்சி) எதிராக ேநற்று உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் ஏற்பாடு செய்யப்பட்ட மெழுகுவர்த்தி அணிவகுப்பு நடந்தது. அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்த அணிவகுப்பில் பங்கேற்றதற்காக முன்னாள் உத்தரகண்ட் மற்றும் உத்தரபிரதேச ஆளுநர் அஜீஸ் குரேஷி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோமதி நகர் காவல் நிலையத்தில் இன்று பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆரின்படி, மாவட்ட போலீஸ் நிர்வாகத்தின் அனுமதியின்றி அணிவகுப்பு நடத்தப்பட்டதாகவும், அணிவகுப்பை நடத்துவதற்கு எந்தவொரு எழுத்துப்பூர்வ அனுமதியையும், போராட்டக்காரர்கள் பெறவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, எப்.ஐ.ஆரில் அணிவகுப்பின் தலைவர்களில் ஒருவராக குரேஷி பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர், கடந்த ஜன. 30ம் தேதியன்று குடியுரிமை திருத்தச் சட்டத்தை வகுப்புவாத சட்டம் என்றும், மதத்தின் அடிப்படையில் இந்த நாட்டிற்கு எதுவும் தேவையில்லை என்றும், இங்குள்ளவர்களுக்கு வேலை தேவை. இங்குள்ள மக்களுக்கான அநீதிக்கு எதிராக நீதி தேவை என்றும் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்கள், சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மறுத்த நிலையில், புதிதாக இயற்றப்பட்ட சட்டம் நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளது.