4 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை: அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
2/4/2025 4:29:53 PM
சென்னை: சென்னை அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் 15 குற்றவாளிகளில் 4 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், ஒருவருக்கு ஆயுள் தண்டனை, ஒருவருக்கு 7 ஆண்டு சிறை, மற்ற 9 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 11 வயது சிறுமியை அதே குடியிருப்பில் வேலை செய்து வந்த தண்ணீர் கேன் சப்ளை செய்பவர், லிப்ட் ஆபரேட்டர், வாட்ச்மேன் உள்ளிட்டோர் பல மாதங்களாக பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, அயனாவரம் போலீசார் 2018ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி ரவிக்குமார்(56), சுரேஷ்(32), ராஜசேகர்(48) எரால்பிராஸ்(58), அபிஷேக்(28), சுகுமாரன்(60), முருகேசன்(54), பரமசிவம்(60) ஜெய்கணேஷ்(23), பாபு(36), பழனி(40), தீனதயாளன்(50), ராஜா(32), சூர்யா(23), குணசேகரன்(55), ஜெயராமன்(26), உமாபதி(42) ஆகிய 17 பேரை கைது செய்தனர்.
அவர்கள் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 354பி, 366 ( பாலியல் வன்கொடுமை) 376 ஏபி (காயமேற்படுத்துதல்) 376 பிடி (கூட்டு பாலியல் வன்கொடுமை) 307 (கொலை முயற்சி), 506 (2) கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழும், பாலியல் குற்றங்களில் இருந்து சிறாரை பாதுகாக்கும் போக்சோ சட்டம் 6 மற்றும் 10வது பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும், 12 வயதுக்கு குறைவான சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் 2018ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குற்றவியல் திருத்தச் சட்டத்தில் புதிதாக நிறைவேற்றப்பட்ட பிரிவுகளின் கீழும் குற்றம் சாட்டப்பட்டது. இதனைத்தொடர்ந்து, 17 பேர் மீதும் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி 300 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர்.
இதனைதொடர்ந்து 2018 டிசம்பர் 21ம் தேதி குற்றவாளிகள் மீதான குற்றங்களை நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, படித்து காட்டி தனித்தனியாக குற்றச்சாட்டுக்களை பதிவு செய்தார். அப்போது அனைவரும் தங்கள் மீதான குற்றத்தை மறுத்தனர். அதன்படி, அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடத்த நீதிபதி அனுமதியளித்தார். பின்னர், ஜனவரி மாதம் அரசு தரப்பு சாட்சிகளிடம் அரசு சிறப்பு வக்கீல் ரமேஷ் விசாரணைகளை தொடங்கினார். அதில், அரசு தரப்பு சாட்சியாக 36 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், அரசு தரப்பில் இந்த வழக்கு தொடர்பாக 120 ஆவணங்களும் சமர்பிக்கப்பட்டது. இந்த வழக்கின் அரசு சாட்சிகளிடம் விசாரணை முடிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்கள் சேக்மெகரூ நிஷா, லட்சுமிகாந்த் ஆகியோர் அரசு சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தினர். இந்த விசாரணை ஜனவரி தொடங்கி டிசம்பர் 11 மாதங்களாக நடந்து முடிந்தது.
இந்தநிலையில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்தநிலையில், போக்சோ நீதிமன்ற நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா கடந்த சனிக்கிழமை தீர்ப்பு வழங்கினார். அதில் பத்தாவது குற்றவாளி பாபு உயிரிழந்து விட்டதால், மற்ற 16 பேருக்கு தீர்ப்பு வழங்கினார். அதில் 16 பேரில் குணசேகரன் என்பவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர் விடுதலை செய்யப்படுகிறார். மற்ற 15 பேரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்படுகின்றனர் என்று கூறி தண்டனை விபரங்களுக்காக வழக்கை தள்ளிவைத்தார். இந்தநிலையில், 15 குற்றவாளிகளின் தண்டனை விபரங்கள் நேற்று சென்னை போக்சோ நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அதற்காக புழல் சிறையில் உள்ள 15 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதியம் 2.30 மணியளவில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது அனைவரும் முகத்தை துணியால் மூடியிருந்தனர்.
இதனைதொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த 50கும் மேற்பட்ட போலீசார் அனைவரையும் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றனர். ஏற்கனவே குற்றவாளிகள் மீது பொதுமக்கள் தாக்குதலில் ஈடுபட்டதால், வழக்கறிஞர்கள், வழக்கிற்காக நீதிமன்றத்திற்கு வருபவர்கள் என அனைவரும் கடும் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இந்தநிலையில், குற்றவாளிகள் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு, நீதிபதி மஞ்சுளா தண்டனை விபரங்களை வாசிக்க தொடங்கினார். அதில் முதல் குற்றவாளியான ரவிக்குமார் போக்சோ சட்டம் 6 பிரிவின் கீழ் இரண்டு முறை குற்றம் செய்துள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு சாகும் வரை இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது.
2வது குற்றவாளியான சுரேஷ், 5வது குற்றவாளியான அபிஷேக், 11வது குற்றவாளியான பழனி ஆகியோர் மீதான போக்சோ சட்டம் பிரிவு 6ன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. 3வது குற்றவாளியான ராஜசேகருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும் 4வது குற்றவாளியான எரால் பிராசுக்கு போக்சோ சட்டப் பிரிவு 10ன் கீழ் 7 ஆண்டு சிறை தண்டனையும், மற்ற 9 குற்றவாளிகளுக்கு போக்சோ சட்டம் 10ன் கீழ் 5 ஆண்டுகள் குறைந்தபட்ச தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அதில் இடைக்கால இழப்பீடாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை, தமிழக அரசு கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார். அதைத் தொடர்ந்து அனைவரும் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.