இறந்து பிறந்த 7 மாத சிசு: மகளை பலாத்காரம் செய்த கொடூர தந்தை சிறையில் அடைப்பு
2/4/2025 3:51:03 PM
பண்ருட்டி: பண்ருட்டி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் குமார் (49). இவரது 16 வயது மகள் 11ம் வகுப்பு படித்து வருகிறார். குமார் அடிக்கடி அருகில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மதுபானம் அருந்திவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் டாஸ்மாக்கில் மதுபானங்களை அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த போது தனது மகள் என்றும் பாராமல் அச்சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதால் அவர் 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். தான் கர்ப்பமாக இருப்பதை அறியாத சிறுமி தினந்தோறும் பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் பள்ளியில் இருந்த போது சிறுமிக்கு திடீரென அதிகமான வயிற்று வலி ஏற்பட்டதால் வீட்டுக்கு திரும்பியுள்ளார்.
அப்போது வீட்டில் இருந்த தாயார், தனது மகள் வயிற்று வலியால் அவதிப்படுவதை அறிந்து அவரை உடனடியாக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே வலி அதிகமாகி அச்சிறுமிக்கு இறந்த நிலையில் குழந்தை பிறந்துள்ளது.இதனால் அதிர்ச்சியடைந்த தாய் செய்வதறியாது திகைத்து நின்றார். அங்கிருந்தவர்கள் இதுகுறித்து பண்ருட்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், சிறுமியையும், இறந்த நிலையில் பிறந்த குழந்தையையும் உடன் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.இதுகுறித்து அச்சிறுமி பண்ருட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நேற்று புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து குமாரை அதிரடியாக கைது செய்து பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.