காயத்தால் ரோஹித் சர்மா ஓய்வு எதிரொலி: ரெண்டு தொடருக்கு இடையே 15 நாளாவது ஓய்வு கொடுங்கப்பா..!கடுப்பான புது ஆலோசனைக் குழு உறுப்பினர்
2/4/2025 3:47:28 PM
புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), மூன்று பேர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனைக் குழு (சிஏசி) பட்டியலை வெளியிட்டது. அந்த குழுவில் மதன் லால், ருத்ரா பிரதாப் சிங், சுலக் ஷனா நாயக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், சிஏசி உறுப்பினரான மதன்லால் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘இந்தியாவின் வருடாந்திர அட்டவணையை பிசிசிஐ தயாரிக்கும் போது, இரண்டு தொடர்களுக்கு இடையில் வீரர்களுக்கு குறைந்தது 10-15 நாட்கள் ஓய்வு இருப்பதை பார்க்க வேண்டும். ரோஹித்தின் காயம் அணிக்கு ஒரு பெரிய அடியாக இருக்கும்’ என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக, இந்திய அணி நியூசிலாந்து நாட்டில் சுற்றுப் பயணத்தில் 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் மோதுகின்றன.
முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது. ஐந்தாவது டி20 போட்டியில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால், ரோகித் சர்மாதான் கேப்டனாக இருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக ரோகித் சர்மாவுக்கு காலில் காயம் ஏற்பட்டதால், ரிடையர்ட் ஹர்ட் முறையில் அவர் பெவிலியன் திரும்பினார். அதன்பின் பீல்டிங் செய்யவும் அவர் வரவில்லை. இதனால் பகுதிநேர கேப்டனாக விக்கெட் கீப்பரான கே.எல்.ராகுல் செயல்பட்டார். இதனையடுத்து, தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்பட்ட ரோகித் சர்மா, ஒன்றிரண்டு நாட்களுக்குள் குணமாகி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நியூசிலாந்து - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் பிப். 5ம் தேதி ஹாமில்டனில் தொடங்குகிறது. 2வது போட்டி ஆக்லாந்தில் 8ம் தேதியும், 3வது போட்டி மவுண்ட் மவுங்கானுயில் 11ம் தேதியும் நடைபெற உள்ளது. அதன்பின் முதல் டெஸ்ட் தொடர் வெலிங்டனில் 21ம் தேதியும், 2வது டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் 29ம் தேதியும் நடைபெறும். ஒருவேளை ரோகித் சர்மா விளையாடாத பட்சத்தில் அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.