ராஜ்யசபா அதிமுக எம்பி சசிகலா புஷ்பா பாஜகவில் சேர்ந்தார்
2/3/2025 3:56:45 PM
சென்னை: அதிமுக மாநிலங்களவை எம்பி சசிகலா புஷ்பா பாஜகவில் நேற்று திடீரென இணைந்தார். அதிமுகவில் பலர் பாஜகவில் இணையும் மனநிலையில் இருப்பதாக சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.தூத்துக்குடி மாநகராட்சி மேயராக 2011 முதல் 2014ம் ஆண்டு வரை இருந்தவர் சசிகலா புஷ்பா. அதன் பின்னர் 2014ம் ஆண்டு முதல் அதிமுக மாநிலங்களவை எம்பியாக பதவி வகித்து வருகிறார். ஜெயலலிதாவுடன் நெருக்கமாக இருந்து வந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவர் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
அதன் பிறகு அவர் கடந்த 5 மாதத்துக்கு மேலாக பாஜகவுக்கு ஆதரவாகவும், மோடி ஆட்சி அமைந்தால் நல்லாட்சி பிறக்கும் எனவும் பேசி வந்தார். இதனால், அவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் சசிகலா புஷ்பா டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக தேசிய பொது செயலாளரும், தமிழக பாஜக பொறுப்பாளருமான முரளிதரராவ், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நேற்று பிற்பகல் பாஜகவில் இணைந்தார். பாஜக தலைவர்கள் அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.
பாஜகவில் இணைந்துள்ள சசிகலா புஷ்பாவின் மாநிலங்களவையின் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் 4ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் தான் தற்போது அவர் பாஜகவில் இணைந்துள்ளார். ஏற்கனவே, அதிமுகவில் இருந்த நயினார் நாகேந்திரன் உள்பட முக்கிய பிரமுகர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். இந்த நிலையில் சசிகலா புஷ்பாவும் பாஜகவில் இணைந்துள்ளது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜவில் இணைந்த சசிகலா புஷ்பா பேசுகையில்,“பிரதமர் மோடி தமிழகத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அதில் ஈர்க்கப்பட்டு நான் பாஜகவில் இணைந்துள்ளேன். தமிழகத்தில் 2021ம் ஆண்டு பாஜக அரசு அமைவதை யாராலும் தடுக்க முடியாது. இன்னும் அதிமுகவில் பலர் பாஜகவில் இணையும் மனநிலையில் தான் இருந்து வருகிறார்கள். அவர்கள் விரைவில் பாஜகவில் இணைவார்கள்” என்றார்.