வெளி மாநிலங்களுக்கு அழைத்து சென்று 2 தீவிரவாதிகளை விசாரிக்க திட்டம்
1/27/2020 2:48:43 PM
நாகர்கோவில்: களியக்காவிளை எஸ்எஸ்ஐ வில்சன் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதிகள் தவுபிக், அப்துல் சமீம் ஆகிய இருவரையும் உடுப்பி, பெங்களூரு, மகாராஷ்டிரா மாநிலங்களில் அழைத்து சென்று விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். கொச்சியில் இருந்து வந்த என்ஐஏ அதிகாரிகள் 2ம் நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
களியக்காவிளை போலீஸ் சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன்(57) கடந்த ஜனவரி 8ம் தேதி துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து அப்துல் சமீம், தவுபிக் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது உபா சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
இவர்களை 10 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின்போது எர்ணாகுளத்தில் உள்ள கேஎஸ்ஆர்டிசி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கழிவுநீர் ஓடையில் துப்பாக்கி, 5 தோட்டாக்கள் மீட்கப்பட்டன. திருவனந்தபுரம் தம்பானூர் பஸ் ஸ்டாண்ட் அருகே ரத்தம் தோய்ந்த கத்தி கைப்பற்றப்பட்டது. பின்னர் களியக்காவிளையில் உள்ள சோதனை சாவடியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட பகுதியில் தீவிரவாதிகள் அப்துல் சமீம், தவுபிக் ஆகியோரை நேரில் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணைகளில் தவுபிக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதி தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்திற்கு சென்று வந்தது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய செய்யது அலி நவாஸ் என்பவருடன் தவுபிக் உள்ளிட்ட ஏழு பேர் காயல்பட்டினம் வந்து சென்றுள்ளதும் தெரியவந்துள்ளது. இனையடுத்து நேற்று மாலையில் டிஎஸ்பி கணேசன் தலைமையிலான போலீசார் தவுபிக்கை காயல்பட்டினம் அழைத்து சென்றனர். அங்குள்ள சீதக்காதி தெருவில் செய்யதலி நவாசின் மனைவி மைதீன் பாத்திமாவின் வீட்டிற்கு அவரை கொண்டு சென்றனர். அவரிடம் அதிகாரிகள் அங்கு வைத்து 30 நிமிடம் விசாரணை நடத்தினர்.
செய்யது அலி நவாஸ் உள்ளிட்டோரை போலீசார் ஏற்கனவே தேடி வரும் நிலையில் அவர்கள் போலீசாருக்கு தெரியாமல் இங்கு தலைமறைவாக சென்று வந்தது தெரியவந்துள்ளது. இங்கு நேற்று மாலை 6 மணியளவில் விசாரணையை முடித்துக்கொண்டு மீண்டும் அவர்கள் நாகர்கோவில் அழைத்து வரப்பட்டனர்.
நீதிமன்ற உத்தரவுப்படி தவுபிக், அப்துல் சமீம் ஆகிய இருவருக்கும் நேற்று இரவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கிடையே கொச்சியில் இருந்து என்ஐஏ அதிகாரிகள் மூன்று பேர் குமரி மாவட்டம் வருகை தந்துள்ளனர். அவர்கள் குமரி மாவட்ட எஸ்.பி., நாத்திடம் இந்த வழக்கு தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தினர். இதில் நேற்று அப்துல் சமீமிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று இரண்டாம் நாளாகவும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தேசிய, சர்வதேச அளவில் அவர்களுக்கு உள்ள தொடர்புகள் குறித்தும், வேறு சதி திட்டங்கள் ஏதும் உள்ளனவா என்பது தொடர்பாகவும் அவர்கள் விசாரித்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, உடுப்பி ரயில் நிலையம் மற்றும் சதி திட்டம் தீட்டிய பெங்களூர், மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளுக்கும் தீவிரவாதிகள் இருவரையும் அழைத்து சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக போலீஸ் காவலில் உள்ள இவர்களின் காவலை நீட்டிக்க கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே நெய்யாற்றின்கரை அருகே உள்ள மருத்தூர் என்ற பகுதியில் உள்ள ஒருவரது வீட்டில் தமிழக கியூ பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். கொலை நடந்த பின்னர் தவுபிக், அப்துல் சமீம் ஆகியோர் நெய்யாற்றின்கரையில் அதிக நேரம் செலவிட்டது இந்த வீட்டை மையப்படுத்தி இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அங்கு இருந்து பண உதவிகள் இவர்களுக்கு கிடைத்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.