விடுமுறை நாளில் மத்திய பட்ஜெட் தாக்கல்: பிப். 1ல் பங்கு சந்தை லீவு வங்கி ஊழியர் ஸ்டிரைக்....வரி செலுத்துவோரை ஊக்குவிக்க வரிவரம்பு உயர வாய்ப்பு
1/24/2020 2:37:34 PM
புதுடெல்லி: வருகிற பிப். 1ல் பங்கு சந்தை விடுமுறை, வங்கி ஊழியர் ஸ்டிரைக், பெரும்பாலான நிறுவனங்கள் விடுமுறை என்ற நிலையில், அன்றைய தினம் (சனிக்கிழமை) மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. வரி செலுத்துவோரை ஊக்குவிக்க வரி வரம்பு உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வருகிற 31ம் ேததி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குகிறது. ஏற்கனவே, நாட்டின் பொருளாதார வீழ்ச்சியால் இந்திய உள்நாட்டு ெதாழில் மற்றும் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. வருகிற 31ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கையை தலைமைப் பொருளாதார ஆலோசகரான கிருஷ்ண மூர்த்தி சுப்ரமணியன் தாக்கல் செய்கிறார். அதற்கு அடுத்த நாளான பிப். 1ம் தேதியில் 2020-21ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.
பிப். 1ம் தேதி காலை 11 மணியளவில் நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த பட்ஜெட், நாட்டின் பொருளாதார மந்தநிலையில் இருந்து மீட்டு, நிதிநிலைமை மேம்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்தாண்டு மத்திய பட்ஜெட் சனிக்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது. பொதுவாக சனிக்கிழமைகளில் பங்குச் சந்தையும், நாடாளுமன்றமும் செயல்படாமல் இருக்கும். ஆனால் இம்முறை பிப். 1ம் தேதி சனிக்கிழமை வருவதால் அன்றையதினம் நாடாளுமன்றம் செயல்படவுள்ளது.
அன்றைய தினத்தில் வங்கி ஊழியர்கள், நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்து உள்ளதால் வங்கிச் சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கிடையே மத்திய பட்ஜெட் அன்றைய தினம் தாக்கலாகி நாட்டின் நிதி குறித்த ஆலோசனைகள், நேரலை செய்திகள் ஊடகங்களில் வெளியாக உள்ளன. பட்ஜெட்டில், நாட்டின் பொருளாதார மந்தநிலையை மேம்படுத்தும் அறிவிப்புகள், வருமான வரிக் குறைப்பு, ஜிஎஸ்டி வரிக் குறைப்பு, வட்டிக் குறைப்பு, வீட்டு வசதித் திட்டத்துக்கான வரிச் சலுகைகள், நுகர்வோர் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகும் என்று பல்வேறு தரப்பிலும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு காலாண்டுகளாகவே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியப் பொருளாதாரம் மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்து உள்ள நிலையில், இந்த பட்ஜெட்டில் மேலும் ஒரு எதிர்பார்ப்பும் உள்ளது.
அதாவது வரி செலுத்துவோரை ஊக்குவிக்கும் வகையில் வரி வரம்பு உயர்த்தப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையில் ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கு 5 சதவீத வருமான வரி விதிக்கப்படுகிறது. இந்த வரி வரம்பை ரூ.7 லட்சமாக உயர்த்த அரசு திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையில் வருமானம் கொண்டவர்களுக்கு 10 சதவீத வரியும், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையில் வருமானம் கொண்டவர்களுக்கு 20 சதவீத வரியும் பிடிக்கப்படும்.
ரூ.20 லட்சம் முதல் ரூ.10 கோடி வரையில் வருமானம் கொண்டவர்களுக்கான வருமான வரி 30 சதவீதமாகவும், ரூ.10 கோடிக்கு மேல் வருமானம் கொண்டவர்களுக்கு 35 சதவீத வரி விதிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. தற்போது ரூ.2.5 லட்சம் வரையில் வருமானம் கொண்டவர்களிடம் வரி வசூல் செய்யப்படுவதில்லை. வரும் பட்ஜெட்டில் ரூ.5 லட்சம் வரையில் வருமானம் கொண்டவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வரி வரம்பு உயர்த்தப்பட்டால், ஆண்டுக்கு ரூ.10 லட்சம் சம்பாதிக்கும் ஒருவருக்கு ரூ.60,000 வரையில் மிச்சமாகும். அதேபோல, ரூ.15 லட்சம் சம்பளம் வாங்குபவருக்கு ரூ.1.1 லட்சமும், ரூ.20 லட்சம் சம்பளம் பெறுபவர்களுக்கு ரூ.1.6 லட்சமும் மிச்சமாகும் என்று மதிப்பிடப்படுகிறது.