எஸ்ஐ வில்சன் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது: ராமநாதபுரம் அருகே பரபரப்பு
1/23/2020 3:48:11 PM
சாயல்குடி: குமரி எஸ்ஐ வில்சன் கொலை வழக்கில் 3 பேர் கைதாயினர். இவர்கள் ஐஎஸ் அமைப்புக்கு நிதி திரட்டியவர்களா என விசாரணை நடந்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்தில் சந்தேகத்திற்கு இடமாக 4 பேர் சுற்றித்திரிவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்ஐ ஜெகதீஸ்வரன் தலைமையிலான போலீசார், நேற்று தேவிபட்டினத்தில் தனியார் பள்ளி அருகே நின்றிருந்த 4 இளைஞர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். ஒருவர் தப்பி சென்றார். 3 பேரை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் எஸ்ஐ வில்சனை சுட்டுக் கொன்ற வழக்கில் தொடர்புடைய அப்துல் சமீம் என்பவருக்கு பணப்பரிமாற்றம் செய்ததாகவும், முஸ்லீம் இளைஞர்களை திரட்டி மதராஸாக்களில் பயிற்சி அளிக்கவும், ஐஎஸ் அமைப்புக்கு நிதி திரட்டுவதற்கான முயற்சியில் இறங்கியதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து தேவிபட்டினம் எஸ்ஐ ஜெகதீஸ்வரன் புகாரின்பேரில், போலீஸார் கீழக்கரையைச் சேர்ந்த பிச்சைக்கனி (எ) புறா கனி (43), தற்போது கீழக்கரையில் வசித்து வரும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அமீர் (31), முகம்மது அலி (28) ஆகியோரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய தேவிபட்டினத்தைச் சேர்ந்த ஷேக்தாவூது (37) என்பவரை தேடி வருகின்றனர்.