லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கிய 3 சார்பதிவாளர்கள் பதிவு இல்லாத பணிக்கு மாற்றம்: பதிவுத்துறை ஐஜி உத்தரவு
1/23/2020 3:03:35 PM
சென்னை: லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கிய 3 சார்பதிவாளர்கள் பதிவு இல்லாத பணிக்கு மாற்றம் செய்து பதிவுத்துறை ஐஜி ஜோதி நிர்மலாசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளது. இதில், ஒரு சில அலுவலகங்களில் பத்திரப்பதிவுக்கு வரும் பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் லஞ்சம் கேட்பதாக அவ்வப்போது லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் வருகிறது. இது போன்ற புகாரின் பேரில் கடந்த அக்டோபர் 30ம் தேதி திருவெறும்பூரில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1.67 லட்சம் வரை பறிமுதல் செய்யப்பட்டது. இதில், சார்பதிவாளர் ஆன்ந்தராஜனிடம் மட்டும் ரூ.1.07 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து அவரது வீடுகளில் நடந்த சோதனையின் போது கணக்கில் வராத நகை, பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.அதே போன்று, கடந்த நவம்பர் 2ம் தேதி சங்ககிரி சார்பதிவாளர் அலுவலகத்திலும் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, சார்பதிவாளர் இந்திரா காந்தி மதிய உணவுக்காக கொண்டு வந்த டிபன் பாக்ஸில் மறைத்து வைத்திருந்த ரூ.39,500 பறிமுதல் செய்தனர். இவர், குமாரபாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றிய போது இதே போன்ற வழக்கில் சிக்கியுள்ளார். இதை தொடர்ந்து அப்போது, அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் இரண்டாவது முறையாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கியதாக கூறப்படுகிறது.
அதே போன்று புதுக்கோட்டை 2ம் இணை சார்பதிவாளர் அலுவலகத்திலும் நடந்த சோதனையில் லட்சக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை, பதிவுத்துறை ஐஜிக்கு அறிக்ைக அளித்ததாக கூறப்படுகிறது. அந்த அறிக்கையின் பேரில், அந்த 3 பேர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த 3 பேரும் பதிவு இல்லாத பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
திருவெறும்பூர் சார்பதிவாளர் ஆனந்தராஜன் சிதம்பரம் சார்பதிவாளர் (வழிகாட்டி), புதுக்கோட்டை 2ம் எண் இணை சார்பதிவாளர் அய்யப்பன் சேலம் கிழக்கு சார்பதிவாளர் (நிர்வாகம்), சங்ககிரி சார்பதிவாளர் இந்திராகாந்தி புதுக்கோட்டை சார்பதிவாளர் (சீட்டு மற்றும் சங்கம்) அலுவலகத்துக்கு பணியிட மாற்றம் செய்து பதிவுத்துறை ஐஜி ஜோதி நிர்மலா சாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த சார்பதிவாளர்களை எக்காரணம் கொண்டும் பதிவுப்பணியில் பகராண்மையில் நியமனம் செய்யக்கூடாது என்று டிஐஜிக்கள், மாவட்ட பதிவாளர்களுக்கும் பதிவுத்துறை ஐஜி அறிவுரை வழங்கியுள்ளார்.