தோகைமலை அருகே பரபரப்பு: நேரில் பார்த்ததால் கடும் ஆத்திரம் மனைவி, க.காதலனுக்கு வெட்டு... கணவன் கைது
1/22/2020 3:42:56 PM
தோகைமலை: வீட்டில் உல்லாசமாக இருந்தபோது மனைவி, கள்ளக்காதலன் ஆகியோரை சரமாரி வெட்டிய கணவன் கைது செய்யப்பட்டார். கரூர் மாவட்டம் தோகைமலை போலீஸ் சரகம் சின்னயம்பாளையம் ஊராட்சியில் உள்ள வெந்தபட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (29). இவர் லாரி டிரைவர். அதே ஊரை சேர்ந்தவர் மகாமுனி (28). இவர்கள் உறவினர்கள் என்பதால் ஆறுமுகத்தின் வீட்டிற்கு மகாமுனி அடிக்கடி வந்துள்ளார். இந்தநிலையில் ஆறுமுகத்தின் மனைவி பிரியங்காவுக்கும் (23) மகாமுனிக்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதன்பிறகு ஆறுமுகம் வீட்டில் இல்லாத போது மகாமுனியும், பிரியங்காவும் உல்லாசமாக இருந்துள்ளனர்.
நேற்று முன்தினம் ஆறுமுகம் வேலைக்கு சென்று விட்டு இரவில் வீட்டிற்கு வந்தபோது மகாமுனியும் பிரியங்காவும் தனிமையில் இருந்ததை கண்டு ஆறுமுகம் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தார். இதனால் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துவந்து மனைவி, கள்ளக்காதலன் ஆகியோரை சரமாரி வெட்டினார். பலத்த காயம் அடைந்த இருவரும் குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கிருந்து மகாமுனியை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மகாமுனியின் மனைவி மோகனப்பிரியா கொடுத்துள்ள புகாரின்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து ஆறுமுகத்தை கைது செய்தனர்.