படூரில் பரபரப்பு: 2 ஏடிஎம் உடைத்து கொள்ளை முயற்சி... ரூ40 லட்சம் தப்பியது
1/22/2020 3:32:11 PM
திருப்போரூர்: சென்னை அருகே ஓ.எம்.ஆர். சாலையில் படூர் உள்ளது. இங்கு தனியார் ஓட்டல் அருகே ஐசிஐசிஐ வங்கி, கனரா வங்கி ஆகியவற்றின் ஏடிஎம்கள் உள்ளன. இன்று காலை 8 மணியளவில் வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுப்பதற்காக ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் அறைக்குள் சென்றார். அப்போது ஏடிஎம் இயந்திரத்தின் முன்பக்கம் கடப்பாரையால் நெம்பி உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்தார். உடனே கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், எஸ்.ஐ. முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் மற்றும் அதன் அருகிலிருந்த கனரா வங்கியின் ஏடிஎம் இயந்திரமும் உடைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.
விசாரணையில், பணம் வைக்கப்படும் உள் அறையை திறக்க முடியாததால் கொள்ளையர்கள் திரும்பி சென்றதும், நேற்று காலையில்தான் 2 ஏடிஎம்களிலும் தலா ரூ.20 லட்சம் வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. ஏடிஎம் இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பதிவுகள் சென்னை தலைமை அலுவலகத்தில் பராமரிக்கப்படுகிறது. அதனால், இதற்கான பதிவுகளை சென்னையில் இருந்து வாங்கி பார்த்தால் மட்டுமே எத்தனை கொள்ளையர்கள் வந்தனர், அவர்கள் வந்த வாகனங்கள் என்ன என்பது குறித்த விபரங்கள் தெரியும் என போலீசார் தெரிவித்தனர்.