புதுகையில் இன்று காலை 9 பேர் கும்பல் வெறிச்செயல்: அதிமுக மாஜி கவுன்சிலர் படுகொலை... இரட்டை கொலைக்கு பழிக்குப்பழியாக தீர்த்துக்கட்டியது அம்பலம்
1/22/2020 3:30:51 PM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஜாமீனில் வந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் இன்று காலை சரமாரி வெட்டி கொலை செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே களமாவூர்சத்திரத்தை சேர்ந்தவர் மூர்த்தி (52). அதிமுக பிரமுகர். களமாவூர் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இவர் கடந்த ஆண்டு நடந்த கீரனூர் காரப்பட்டு தொழிலதிபர் வீராச்சாமி, அவரது மகன் முத்துகுமார் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் ஜாமீனில் வெளிவந்தார். இவர் தினமும் களமாவூர் சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள டீக்கடையில் டீ குடிப்பார். வழக்கம்போல் இன்று காலை 7.30 மணி அளவில் அவர் டீ குடிக்க டீக்கடைக்கு வந்தார். அப்போது அருகில் இருந்த ஊர்க்காரர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திருச்சி பகுதியிலிருந்து 3 பைக்குகளில் வந்த 9 பேர் கொண்ட கும்பல் டீ குடிப்பது போல் கடைக்குள் வந்தனர். திடீரென 9 பேரும் மறைத்து வைத்திருந்த அரிவாள், கத்தியை எடுத்து மூர்த்தியை சரமாரி வெட்டிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த மூர்த்தி துடிதுடித்து அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கொலையை பார்த்து டீக்கடையில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் மற்றும் மூர்த்தியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். மூர்த்தியின் குடும்பத்தினர், உறவினர்கள் அங்கு திரண்டு கதறினர். கிராம மக்களும் திரண்டதால் புதுக்கோட்டை-திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். எஸ்பி அருண் சக்திகுமார், டிஎஸ்பி பிரான்சிஸ் ஆகியோரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பதற்றம் நிலவுவதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விசாரணையில், கீரனூர் அருகே காரப்பட்டு கிராமத்தை சேர்ந்த தொழிலதிபர் வீராசாமியும், மூர்த்தியும் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தனர். அப்போது மூர்த்தி, வீராசாமியிடமிருந்து ரூ1 கோடி கடன் வாங்கியிருந்தார். கடனை அவரால் திருப்பி தரமுடியவில்லை.
இதனால் வீட்டோடு உள்ள அவரது நிலத்தை வீராசாமிக்கு மூர்த்தி எழுதி கொடுத்தார். ஆனால் அங்கிருந்து மூர்த்தி வீட்டை காலி செய்யாமல் இருந்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த வீராசாமி, அவரது மகன் முத்துகுமார் ஆகியோர் முக்கிய பிரமுகர்களுடன் சென்று பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் மூர்த்தி வீட்டை காலி செய்யவில்லை. இதனால் வீராசாமியும், மகன் முத்துகுமாரும் சேர்ந்து மூர்த்தியை தகாத வார்த்தைகளால் தரக்குறைவாக திட்டி அவமானப்படுத்தியதால் ஆத்திரமடைந்த மூர்த்தி வீராசாமியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அதன்படி கடந்த 6-2-19 அன்று சமாதான பேச்சுவார்த்தைக்கு களமாவூர்சத்திரத்தில் உள்ள தனது வீட்டுக்கு வரும்படி போன் மூலம் அழைத்தார். இதை நம்பி பேச்சுவார்த்தைக்கு வந்த வீராசாமி, அவரது மகன் முத்துகுமாரை, மூர்த்தி அவரது ஆதரவாளர்கள் வெட்டி படுகொலை செய்தனர். இந்த கொலை வழக்கில் கைதான மூர்த்தி சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வந்தார். இந்நிலையில் தான் அவர் இன்று காலை வெட்டிக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதனால் வீராசாமி, முத்துகுமார் இரட்டை கொலைக்கு பழிக்கு பழியாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு காரணமா என கீரனூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வீராசாமிக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. வீராசாமியும், ஒரே மகனும் கொல்லப்பட்டநிலையில் 2 மகள்கள் மட்டும் தான் உள்ளனர். வீராசாமிக்கு பல கோடி சொத்து உள்ளது. இந்நிலையில் மகள், மருமகன்கள் கூலி ஆட்களை ஏவி கொலை செய்தார்களா என்ற கோணத்தில் போலீசார் அவரிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 லட்சம் பேரம் பேசி கொலை?
மூர்த்தியை வெட்டி கொலை செய்ய ஏற்கனவே கொலையான தொழிலதிபரின் உறவினர் ஒருவர் மூலம் கூலிபடைக்கு ₹30 லட்சம் பேரம் பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வீரசாமியின் உறவினர்கள் தான் இந்த கொலையை திட்டமிட்டு செய்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கொலை நடந்தபோது மப்டியில் நின்ற போலீஸ்
மூர்த்தியை 9 பேர் கும்பல் வெட்டும்போது அங்கு மப்டியில் ஒரு போலீஸ்காரர் நின்றதாக கூறப்படுகிறது. வெட்டும்போது அவர் எதுவும் தடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாராம். சிறிது நேரத்திலே அவர் சென்றுவிட்டாராம். அந்த போலீஸ்காரர் யார், எதற்காக அங்கு வந்தார். எதார்த்தமாக அப்பகுதிக்கு வந்தாரா? இந்த கொலைக்கும் அவருக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.