ஒருதலை காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியை காரில் கடத்திய பள்ளி மாணவர்கள் உள்பட 3 பேர் கைது: போரூர் அருகே பரபரப்பு
1/22/2020 3:21:08 PM
குன்றத்தூர்: போரூர் அருகே ஒருதலை காதல் விவகாரத்தில் ஒரு கல்லூரி மாணவியை காரில் கடத்திய பள்ளி மாணவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை போரூர் அருகே கெருகம்பாக்கத்தில் நேற்று மாலை ஒரு கார், அங்குள்ள பள்ளத்தில் சிக்கியது. அந்த காரை வெளியே எடுக்க டிரைவர் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. இதற்கிடையே காருக்குள் இருந்து என்னை காப்பாத்துங்க என ஒரு இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. இதைத் தொடர்ந்து காரின் அருகே பொதுமக்கள் சென்று பார்த்தனர்.
அங்கு ஒரு இளம்பெண்ணை 3 வாலிபர்கள் பலவந்தமாக பிடித்து வைத்திருப்பது தெரியவந்தது. அப்பெண் கதறி அழுதுகொண்டிருந்தார். அந்த 3 பேர் கும்பலிடம் இருந்து இளம்பெண்ணை பொதுமக்கள் மீட்டனர். மேலும் 3 பேரையும் பிடித்து, சரமாரி தர்ம அடி கொடுத்து பிடித்து வைத்தனர்.இதுகுறித்து தகவலறிந்ததும் மாங்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதையடுத்து மீட்கப்பட்ட பெண் மற்றும் 3 பேரையும் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், பிடிபட்ட முக்கிய குற்றவாளியான போரூர் அடுத்த மதனாந்தபுரத்தை சேர்ந்த 18 வயதான ஒரு கல்லூரி மாணவன்தான் இக்கடத்தலுக்கு தலைவன் எனத் தெரியவந்தது.
மேலும், இவன் தன்னுடன் பள்ளியில் படித்த ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளான். தற்போது அப்பெண் கல்லூரியில் சேர்ந்து படித்தபோதும், அவன் விடாமல் துரத்தி சென்று ஒருதலையாக காதலித்து வந்துள்ளான். ஆனால், அவனது காதலை அப்பெண் ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அப்பெண்ணை கடத்தி சென்று, வலுக்கட்டாயமாக திருமணம் செய்வதற்காக 2 பள்ளி மாணவர்களை துணைக்கு சேர்த்துக் கொண்டு காரில் கடத்தியிருக்கிறான். அந்த கார் கெருகம்பாக்கத்தில் சாலை பள்ளத்தில் சிக்கியதால் இக்கும்பல் பொதுமக்களிடம் சிக்கியது என்ற பரபரப்பு தகவல்கள் கிடைத்தன.
இதுகுறித்து மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பள்ளி மாணவர்கள் உள்பட 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் நேற்றிரவு 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவர்களை செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். இதில் கடத்தப்பட்ட பெண், மத்திய உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஒருவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் நேற்று மாலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.