மலைப்பாதையில் சென்றபோது 100 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது: டிரைவர் பலி
1/13/2020 4:59:47 PM
பேரணாம்பட்டு: வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த அருண்குமார் என்பவருக்கு சொந்தமான கண்டெய்னர் லாரி கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து நேற்றிரவு மைதா லோடு ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி வந்தது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா பக்கிரிபாளையம் கிராமத்தை சேர்ந்த பஷிர்பாய்(41) என்பவர் ஓட்டிச் சென்றார். இன்று அதிகாலை தமிழக-ஆந்திர எல்லையான பேரணாம்பட்டு அடுத்த பத்தலப்பல்லி மலைப்பகுதியில் லாரி வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுபாட்டை இழந்த கண்டெய்னர் லாரி அங்குள்ள சுமார் 100அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லாரி நொறுங்கியது.
இதனால் டிரைவர் பஷிர்பாய் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பேரணம்பாட்டு போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பஷிர்பாய் சடலத்தை மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.