800 காளைகளுக்கு டோக்கன் களைகட்டுது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரர்கள் 1000 பேருக்கு அனுமதி
1/13/2020 4:59:07 PM
அவனியாபுரம்; அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு இன்று முன்பதிவு செய்யப்பட்டு, அனுமதி டோக்கன்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டில் பங்கேற்க 800 காளைகள், 1000க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களுக்கு இன்று டோக்கன்கள் வழங்கப்பட்டன.
மதுரையை அடுத்த அவனியாபுரத்தில் நாளை மறுநாள் தைப்பொங்கல் திருநாளன்று (15ம் தேதி) ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. ஜன.16ம் தேதி பாலமேட்டிலும், அடுத்த நாள் ஜன.17ம் தேதி உலகப்பிரசித்தி பெற்ற அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது.அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டில் பங்கேற்க உள்ள காளைகள் மற்றும் வீரர்களுக்கான முன்பதிவு இன்று காலை துவங்கியது. இதற்காக நேற்று இரவு முதலே பெண்கள் உட்பட காளைகளின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் ஆயிரக்கணக்கானோர் அவனியாபுரத்தில் குவிந்தனர். ஆன்லைனில் பதிவு செய்த காளைகளுக்கு இன்று காலை 8 முதல் அவனியாபுரம் கால்நடை மருத்துவமனையில் டோக்கன்கள் வழங்கப்பட்டன. காளைகள் முன்பதிவிற்கு ஒரு நபருக்கு ஒரு டோக்கன் மட்டுமே வழங்கப்பட்டது. கால்நடை மருத்துவத் துறை இணை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, உதவி இயக்குனர் சரவணன் சரவணன் தலைமையில் 16 பேர் கொண்ட குழுவினர் காளைகளை பதிவு செய்து, அனுமதி டோக்கன்களை வழங்கினர். காளைகளின் உடல் தகுதி குறித்து கால்நடை மருத்துவர் வழங்கிய சான்று, அடையாள சான்று, காளைகளின் உரிமையாளர்களின் ஆதார் அட்டை, கைபேசி எண் ஆகிய விபரங்கள் சரிபார்க்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டு, அனுமதி டோக்கன்கள் வழங்கப்பட்டன. முழுமையான பரிசோதனைகளுக்கு பின்னர், இன்று 800 காளைகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.
மாடுபிடி வீரர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தெற்கு வட்டாட்சியர் அமீஷ் சர்தார் தலைமையில் மதுரை மாநகராட்சி மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து அனுமதி டோக்கன்களை வழங்கினர். 21 வயதிற்கு குறையாமலும், 45 வயதிற்கு மிகாமலும் உள்ள இளைஞர்களுக்கு முறையான பரிசோதனைகளுக்கு பின்னர் அனுமதி டோக்கன்கள் வழங்கப்பட்டன. காளைகள், காளையர்களின் முன்பதிவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் உதவி ஆணையர் ராமலிங்கம், அவனியாபுரம் காவல் ஆய்வாளர் பெத்துராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஐகோர்ட் கிளை உத்தரவுப்படி ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ளது. ஜல்லிக்கட்டு நாளில் அவனியாபுரத்தில் உள்ள மந்தையம்மன் கோயிலில் காளைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். பூஜை முடிந்த பின்னர் திருப்பரங்குன்றம்-அவனியாபுரம் சாலையில் உள்ள ஈஸ்வரன் கோயில் அருகே அமைக்கப்படும் வாடிவாசல் வழியாக முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்படும். தொடர்ந்து ஊர் பெரியவர்களின் காளைகள், டோக்கன் வரிசையில் காளைகள் களமிறங்கும். மாடுபிடி வீரர்கள் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை 200 பேராக களமிறங்க அனுமதிக்கப்படுவர். கால்நடைகளை பரிசோதிக்க 16க்கும் மேற்பட்ட மருத்துவக் குழுவினரும், மாடுபிடி வீரர்களின் உடல் தகுதியை பரிசோதிக்க 10க்கும் மேற்பட்ட மருத்துவக் குழுவினரும் ஜல்லிக்கட்டு திடல் அருகே பணியில் ஈடுபட உள்ளனர்.உலகப் பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று நடந்தது. தொடர்ந்து காளைகளின் முன்பதிவும் இன்று காலை துவங்கியது.