திருச்சி அருகே அதிமுகவினர் அராஜகம் பஞ்சாயத்து தலைவி மீது தாக்குதல்: கணவனுடன் உள்ளிருப்பு போராட்டம்
1/13/2020 4:57:34 PM
திருச்சி: திருச்சி அருகே திமுகவை சேர்ந்த பஞ்சாயத்து தலைவி மீது அதிமுகவினர் கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.திருச்சி மணிகண்டம் ஒன்றியம், முடிகண்டம் ஊராட்சி மன்ற தலைவியாக இருப்பவர் ஓலையூரை சேர்ந்த ஜான்சி திவ்யா. இவர் திமுகவை சேர்ந்தவர். இவரை எதிர்த்து போட்டியிட்ட தினேஷ்குமார் தோல்வி அடைந்தார். இதனால் தினேஷ்குமார் அவரது தந்தை மூக்கன் ஆகியோருக்கும் ஜான்சி திவ்யாவின் கணவர் சின்னதம்பி மீது விரோதத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில், இவரது ஊராட்சிக்குட்பட்ட துவாக்குடி முதல் பஞ்சப்பூர் வரையில் ரிங் சாலை அமைக்கும் பணிக்கு நடந்து வருகிறது. இந்த பணிக்காக திருமலைசமுத்திரம் குளத்தில் இருந்து ஓலையூர் வழியாக லாரிகளில் கிராவல் மண் ஏற்றிச் சென்றவர்களை மூக்கன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தடுத்து இந்த வழியாக மண் ஏற்றி செல்லக்கூடாது எனக்கூறி கமிஷன் கேட்டதாக தெரிகிறது. இதை ஊராட்சி மன்ற தலைவி ஜான்சி திவ்யா, அவரது கணவன் ஆகியோர் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் ஊராட்சி மன்ற தலைவரை சரமாரி தாக்கியதில் காயம் அடைந்தார்.
இதையடுத்து தனது உயிருக்கு பாதுகாப்பு கேட்டு நேற்றிரவு ஓலையூரிலுள்ள முடிகண்டம் ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி தலைவி ஜான்சிதிவ்யா கணவனுடன் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார். பஞ்சாயத்து தலைவரின் ஆதரவாளர்களும் தர்ணாவில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்ததும் மணிகண்டம் போலீசார் மற்றும் திருவெறும்பூர் டிஎஸ்பி சுரேஷ்குமார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். விஏஓ நவின்குமார், ஆர்ஐ சசிக்குமார் ஆகியோரும் பேச்சுவார்த்தை நடத்தினர். மாவட்ட கலெக்டர் வரும் வரை போராட்டம் தொடரும் என கூறிய அவர்கள் உண்ணாவிரதம், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.