குடந்தையில் டெல்லி பெண் பலாத்கார வழக்கு 4 வாலிபர்களுக்கு வாழ்நாள் சிறை: ஆட்டோ டிரைவருக்கு 7 ஆண்டு கடுங்காவல்
1/13/2020 4:55:56 PM
தஞ்சை: டெல்லியை சேர்ந்த 25 வயது பட்டதாரிப் பெண் ஒருவருக்கு தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஒரு வங்கியில் வேலை கிடைத்தது. இதனால் வேலையில் சேருவதற்காக 2018ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி அந்த பெண், சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரயிலில் இரவு 11 மணி அளவில் கும்பகோணம் வந்தார். ரயில் நிலையத்தில் இருந்து லாட்ஜ்க்கு ஆட்டோவில் சென்ற அந்த பெண்ணை திருப்பணிப்பேட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் குருமூர்த்தி (25) மாற்று பாதையில் அழைத்து சென்றார். இதை அறிந்ததும் அந்த பெண் ஆட்டோவில் டிரைவரிடம் தகராறு செய்தார். பின்னர் அவர் ஆட்டோவில் இருந்து இறங்கி பைபாஸ் ரோட்டில் நடந்து சென்றார்.அப்போது, பைக்கில் போதையில் வந்த தினேஷ் (24), வசந்த்(22) ஆகியோர் டெல்லி பெண்ணிடம் நைசாக பேச்சுக்கொடுத்து பின்னர் நாச்சியார்கோவில் பகுதியில் மறைமுகமான இடத்துக்கு கொண்டு சென்று மிரட்டி பலாத்காரம் செய்தனர். நண்பர்கள் புருசோத்தமன் (19), அன்பரசன் (18) ஆகியோரை செல்போனில் அழைத்தனர். பின்னர் அவர்களும் வந்து பலாத்காரம் செய்தனர். பின்னர் அந்த பெண்ணை அப்படியே போட்டு விட்டு 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இதுசம்பந்தமாக ஆட்டோ டிரைவர் மற்றும் குற்றவாளிகள் 4 பேரையும் கைது செய்து 4பேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு தஞ்சை மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த நிலையில், இவ்வழக்கில் நீதிபதி எழிலரசி இன்று தீர்ப்பு வழங்கினார். இதில் பலாத்காரத்தில் ஈடுபட்ட தினேஷ், வசந்தகுமார், புருசோத்தமன், அன்பரசன் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும் ஒவ்வொருவருக்கும் தலா ₹50 ஆயிரம் அபராதம் விதித்தார். இந்த ஆயுள் தண்டனை என்பது 4 பேரும் சாகும்வரை சிறையிலேயே இருக்க வேண்டும். இவர்கள் இயற்கையாக இறந்த பின்னர் தான் உடலை வெளியே கொண்டு செல்ல வேண்டும் என்றும், குற்றவாளிகள் 4 பேரிடம் இருந்து அபராதமாக பெற்ற ₹2 லட்சத்தை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணமாக வழங்க வேண்டும். இந்த 2 லட்சம் ரூபாய் நிவாரணம் போதுமானது இல்லை. சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலமாக அரசிடம் இருந்து உரிய இழப்பீடு பெற்றுத்தர நீதிமன்றம் பரிந்துரைக்கிறது. ஆட்டோ டிரைவர் குருமூர்த்திக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ₹5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து 4 பேரும் பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.