சபரிமலையில் இளம்பெண்கள் தரிசனம் செய்யலாம் என்பதை எதிர்த்து 65 மேல்முறையீடு வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை: தலைமை நீதிபதி தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கிறது
1/12/2025 2:23:58 PM
புதுடெல்லி: சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் ெசய்யலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள 65 மேல்முறையீட்டு மனுக்கள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வு முன் நாளை விசாரணைக்கு வரவுள்ளது. திருவாங்கூர் தேவசம் போர்டு நிர்வகித்துவரும் சபரிமலை ஐயப்பன் கோயிலில், 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி இல்லை. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, பல்வேறு கட்ட விசாரணைகளைத் தாண்டி, உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வுக்கு, கடந்த 2018ல் வந்தது. அவருடன் ஆர்.எஃப். நாரிமன், ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் மற்றும் இந்து மல்ஹோத்ரா என 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இவ்வழக்கில் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. சபரிமலையில், அனைத்து வயதுடைய பெண்களையும் வழிபட அனுமதித்து உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது. இதைத் தொடர்ந்து கேரளாவில் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. சபரிமலைக் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கக்கூடாது என்று கூறி, பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராடின. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து 56 மேல்முறையீட்டு மனுக்கள் உள்ளிட்ட 65 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. விசாரணையைப் பெரிய அமர்வுக்கு மாற்றுவதாகக் கடந்த நவம்பர் 14ம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது.
இருந்தும், சபரிமலை விவகாரத்தில் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பரில் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிப்பது குறித்து உச்சநீதிமன்றம் எதுவும் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து, சபரிமலை தொடர்பான வழக்குகளைத் தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தவிர, இந்த அமர்வில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, அஷோக் பூஷன், எல்.நாகேஷ்வர ராவ், மோகன் எம். சந்தானகவுடர், எஸ்.அப்துல் நசீர், ஆர்.சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய் மற்றும் சூர்ய கந்த் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். இந்நிலையில், ‘சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் சுவாமி தரிசனம் செய்யலாம்’ என்ற உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுக்கள், நாளை (ஜன. 13) விசாரிக்கப்பட உள்ளன. ஆனால், ‘சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு செய்யலாம்’ என்று கடந்த 2018, செப்டம்பரில் தீர்ப்பளித்த 5 நீதிபதிகள் அமர்வில் இருந்த பெண் நீதிபதியான இந்து மல்ஹோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருந்தார். அவர், தற்போதைய 9 நீதிபதிகள் அமர்வில் இடம்பெறவில்லை.
இதேபோல், சபரிமலை தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுக்களை பெரிய அமர்வுக்கு மாற்றிய 5 நீதிபதிகள் அமர்வில் இருந்த ஆர்.எப்.நாரிமன், டி.ஒய்.சந்திரசூட் ஆகிய இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருந்தனர்.அதனால், இவர்கள் இருவரும் தற்போதைய அமர்வில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் நுழைய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து இருந்தாலும், பெண்கள் நுழைவது அவர்களின் வயது உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.ஆனால் கோயில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு இருந்து வருகிறது. இந்தாண்டு ஐயப்பன் கோயிலுக்கு சென்ற பக்தர்களில் பெரும்பாலும் கோயில் விதிமுறைக்கு உட்பட பெண் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதனால், கடந்தாண்டை போல் இந்தாண்டு கேரளாவில் பதற்றம் ஏற்படவில்லை.கடந்த சில வாரங்களுக்கு முன் பெண் சமூக ஆர்வலர் சிலர் கோயிலுக்கு செல்ல முயன்ற போது அவர்கள் போலீசார் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.