குமரி எஸ்.ஐ.யை சுட்டுக் கொன்ற வழக்கில் கேரள எல்லையில் 2 பேர் சிக்கினர்
1/10/2025 2:18:38 PM
நாகர்கோவில்: குமரி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை சுட்டு கொன்ற வழக்கில், கொலையாளிகள் தப்ப உதவியதாக கேரள - குமரி எல்லையில் 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலையாளிகள் 2 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். குமரி மாவட்டம் களியக்காவிளை மார்க்கெட் ரோட்டில், குமரி மாவட்ட காவல்துறை சார்பில் சோதனை சாவடி உள்ளது. நேற்று முன்தினம் இரவு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (57) பணியில் இருந்தார். அப்போது இரு மர்ம நபர்கள், சோதனை சாவடிக்குள் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு, பின்னர் அவரை வெளியே இழுத்து போட்டு அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர்.
இதை பார்த்து அந்த நேரத்தில் தடுக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் ரகுபாலாஜியை துப்பாக்கியை காட்டி மிரட்டி விட்டு, அருகில் உள்ள பள்ளிவாசல் பின்பகுதி வழியாக காம்பவுண்ட்டுக்குள் நுழைந்து தப்பி சென்றனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த வில்சனை, மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் வில்சன் இறந்தது தெரிய வந்தது. வில்சன் உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
அவரது உடல் மார்த்தாண்டத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. சம்பவ நடந்த இடம் கேரள எல்லை பகுதி என்பதால், கேரள டிஜிபி மற்றும் போலீஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளை கண்டுபிடிக்கும் வகையில், பள்ளிவாசல் மற்றும் மார்க்கெட் ரோடு, களியக்காவிளை சோதனை சாவடியை கடந்து செல்லும் கேரள மாநிலம் பாறசாலை பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமிராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் பள்ளிவாசலுக்கு பதற்றத்துடன் ஓடும் இரு நபர்களின் உருவம் சிக்கியது.
இவர்கள் திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த அப்துல் சமீம், நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்த தவுபிக் என்பது தெரிய வந்துள்ளது.
கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கேரள காவல்துறை சார்பில் 3 தனிப்படைகள் அமைத்துள்ளனர். போலீசாரால் தேடப்படும் நபர்கள் அப்துல் சமீம், தவுபிக் ஆகியோர் கேரளாவில் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்து இருக்கிறது. ஆகவே தற்போது கேரளா முழுவதும் சோதனை நடந்து வருகிறது. மேலும் அப்துல் சமீம், தவுபீக் ஆகியோரின் நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே இந்த சம்பவம் பற்றிய விசாரணை நடத்த தேசிய புலனாய்வு அதிகாரிகள் குமரி மாவட்டம் வந்துள்ளனர். கேரளாவுக்கும் சென்று அவர்கள் விசாரணை நடத்த உள்ளனர். குமரி எஸ்.ஐ. கொலை தொடர்பாக திருவனந்தபுரம், கொல்லம், மலப்புரம் உள்பட பல்வேறு இடங்களில் சந்தேகத்துக்கு இடமான வகையில் திரிந்த 20 பேரை போலீசார் பிடித்துள்ளனர். இப்படி சிக்கியவர்களை கேரள போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
சன்மானம்: குமரி மாவட்ட சோதனை சாவடியில் எஸ்.ஐ. சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்படும் 2 பேர் பற்றி துப்பு கொடுத்தால் தலா ரூ.2 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என தமிழக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். அப்துல் சமீம் மற்றும் தவுபிக் ஆகியோர் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என ஏற்கனவே கேரள அரசு அறிவித்து உள்ளது. இந்நிலையில், எஸ்ஐ வில்சனை கொலை செய்த வழக்கில் தேடப்படும் 2 தீவிரவாதிகளுக்கு உதவியாக பாலக்காட்டை சேர்ந்த 2 பேரை கியூ பிராஞ்ச் போலீசார் பிடித்துள்ளனர்.
எஸ்.ஐ. கொலை தொடர்பாக தமிழக கியூ பிராஞ்ச் போலீசாரும் கேரளாவில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பாலக்காட்டை சேர்ந்த 2 பேர் தீவிரவாதிகள் அப்துல் சமீம், தவுபிக் ஆகியோருக்கு உதவியதாக தமிழக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தமிழக - கேரள எல்லையில் உள்ள பாறசாலை பகுதியில் 2 பேரை போலீசார் பிடித்துள்ளனர். அவர்கள் இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து துருவி துருவி விசாரித்து வருகின்றனர்.
பின்னணி
தமிழகத்தில் தாக்குதல் நடத்தும் சதி திட்டத்துடன் பெங்களூருவில் முகம்மது ஹானிப்கான், இம்ரான்கான், முகமது சையது ஆகிய 3 தீவிரவாதிகளை நேற்று முன்தினம் கைது செய்திருந்தனர். அவர்களிடம் இருந்து 3 துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் சென்னை கொண்டுவரப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குமரி போலீஸ் எஸ்.ஐ. மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
தேடப்படும் அப்துல்சமீம் 2013ம் ஆண்டு நாகர்கோவில் பிஷப் ஹவுஸ் அருகே ஆசாரிபள்ளம் சாலையில் பாஜ மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஆர்.காந்தியை அரிவாளால் வெட்டி படுகொலை செய்ய முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர். இவர் மீது சென்னை, அம்பத்தூரில் பாடி சுரேஷ்குமார் என்பவரை வெட்டி கொலை செய்த வழக்கும் உள்ளது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்திருந்தார். இவர் மீது தக்கலையில் அலங்கார வளைவு ஒன்றுக்கு தீ வைத்த வழக்கு, புழல் சிறையில் ஜெயில் வார்டன் மீது தாக்குதல் நடத்திய வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. மேலும் இவர் கடந்த 13.12.2024 முதல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார்.
போலீசாரால் தேடப்படுகின்ற தவுபிக் மீது குளச்சலில் முருகன் என்ற பா.ஜ நிர்வாகியை தாக்கிய வழக்கு, ஏர்வாடியில் பா.ஜ நிர்வாகி முத்துராமன் என்பவரை அரிவாளால் வெட்டிய வழக்கு, தக்கலையில் ராமர் கோயிலில் மாட்டு குடலை வீசிச்சென்றது தொடர்பான வழக்கு உள்ளிட்ட 4 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில் இவர்கள் தீவிரவாதிகளுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளனர். இதில் பெங்களூருவில் நேற்று முன்தினம் முகம்மது ஹானிப்கான், இம்ரான்கான், முகம்மது செய்யது ஆகிய 3 தீவிரவாதிகளை கியூ பிரிவு போலீசார் கைது செய்திருந்தனர். இவர்களுடன் 2 பேருக்கும் தொடர்பு இருந்துள்ளது. கூட்டாளிகளின் கைதான தகவல் அறிந்து ஆத்திரம் அடைந்துள்ளனர். இதனாலேயே இவர்கள் போலீஸ் சோதனை சாவடி மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.