குளத்தில் குதித்து போலீசுக்கு தண்ணிக்காட்டிய பிரபல கொள்ளையன் துப்பாக்கி முனையில் கைது
1/9/2025 3:27:32 PM
நெல்லை: போலீசார் பிடிக்க முயன்றபோது ஆற்றில் குதித்து தப்பி, குளத்தில் தண்ணீருக்குள் பதுங்கிய கொள்ளையனை துப்பாக்கி முனையில் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் போலீசார் மடக்கி பிடித்தனர். நெல்லை அருகே சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்த இச்சம்பவம் குறித்த விவரம் வருமாறு: நெல்லை பேட்டை எம்ஜிஆர் நகர் கருமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர் (27). இவர் நேற்று மதியம் தனது நண்பர் ஒருவருடன் கோபாலசமுத்திரம் தாமிரபரணி ஆற்றில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் குளித்துக் கொண்டிருந்தார். இதைப்பார்த்த பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த முன்னீர்பள்ளம் போலீசார், ஆற்றுக்குள் இறங்கி இருவரையும் விரட்டிப் பிடிக்க முயன்றனர். பாஸ்கரின் கூட்டாளி எஸ்கேப் ஆனார். இதனிடையே ஆற்றை நீந்தி கடந்து வயல்வெளி வழியாக ஓடிய பாஸ்கரனை போலீசார் விடாமல் தொடா்ந்து விரட்டிச் சென்றனர். இதுகுறித்து வயர்லெஸ் மூலம் தகவலறிந்து உஷாரான சுத்தமல்லி போலீசார் சாலையில் எதிரே ஓடிவந்த பாஸ்கரை பிடிக்க முற்பட்டனர். இதையடுத்து வந்தவழியே திரும்பி ஓடிய பாஸ்கர், வயல்கள்வழியாக அருகேயுள்ள சுத்தமல்லி புதுக்குளத்தில் குதித்து நீந்தி நடுப்பகுதிக்கு சென்றார்.
இதையடுத்து குளத்தை சுற்றிவளைத்த போலீசார் பாஸ்கரை கரைக்கு வந்துவிடும்படி அழைத்தனர். ஆனால் அவர் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்து ரகளையில் ஈடுபட்டார். சுமார் 2 மணி நேரமாக பாஸ்கர் கண்ணாமூச்சி காட்டியதால் உடனடியாக பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்து, ரப்பர் படகுடன் வரும்படி அழைத்தனர். உடனே தீயணைப்பு படை வீரர்களும் ரப்பர் படகுடன் அங்கு விரைந்து வந்தனர். இதையடுத்து, போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் ரப்பர் படகில் பாஸ்கரை நெருங்கிச் சென்றனர். அப்போது அவர் அரிவாளை காட்டி வெட்டி விடுவதாக மிரட்டல் விடுத்தார். போலீசார் அவரை சுட்டுப் பிடிப்போம் என்று எச்சரிக்கை விடுத்ததால் பயந்த பாஸ்கரை தீயணைப்பு வீரர்கள் துணையுடன் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் மடக்கிப் பிடித்து கைது செய்து கரைக்கு கொண்டுவந்தனர். சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பலே கொள்ளையன்
போலீசார் மடக்கிப்பிடித்த பாஸ்கர் மீது நெல்லை மாநகர் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், தூத்துக்குடி, மதுரை காவல் நிலையங்களிலும் நகை பறிப்பு, வழிப்பறி, திருட்டு, அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒரு வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை பெற்று ஜாமீனில் வெளிவந்த நிலையில் தற்போது போலீசாரிடம் சிக்கிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.